Thursday, October 23, 2014

விக்ரக ஆராதனை!!!!!!!!!

விக்ரக ஆராதனையை எதிர்ப்பவர்கள் நாகரிகம் தோன்றிய காலத்திலிருந்து இருக்கத்தான் செய்கிறார்கள். பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் உலா வந்த சித்தர் பெருமக்களும் இதைச் சாடி இருக்கிறார்கள். இன்றளவும் வெளிநாட்டினரும், நம் நாட்டைச் சார்ந்த சிந்தனாவாதிகளும் இதைத் தவறு என்று கூறி இருக்கிறார்கள். ஆனால் கூர்ந்து கவனிக்கும் போது இந்த கருத்தை வலியுறுத்திச் சொன்னவருடைய சிஷ்யப் பரம்பரைகள் அந்த மேதாவிகளின் விக்கிரகத்தைச் செய்து அதை வணங்கியோ, அதற்கு மாலையிட்டோ, மலர் கொத்துகளை வைத்தோ காரியங்களைச் செய்து வருகிறார்கள். நொடிப் பொழுதும் மறவாமல் நான் வணங்கி வரும் சித்தர்களும், என்குருவும் கூட விக்கிரக ஆராதனை குறித்து சில விமர்சனங்களை முன் வைக்கிறார்கள். எனினும் பெரும்பாலான சித்தர் பெருமக்கள் சிவலிங்க வழிபாடு செய்திருக்கிறார்கள். அதற்கு உருவம் கிடையாது என்று சொல்லிக் கொள்வார்கள். என்றாலும், அதுவும் ஒரு விக்கிரகமே. உள்ளே இறைவன் இருக்கையில் ஏன் வெளியே தேட வேண்டும் என்பது அவர்களுடைய வாதம். ஆனால், அந்த இறைவன் எங்குதான் இல்லை என்று சிந்தித்துப் பார்க்கும் போது, அவர் அந்த கல்லிலும், விக்கரத்திலும் இருக்கத்தானே செய்கிறார்.
விக்கிரக ஆராதனையால் மேன்மை அடைந்த ஞானிகள் நம் தேசத்தில் பலருண்டு. எதுவுமே இல்லாத வெறுமையில் நிற்கும் மனம் ஏதோ ஒன்றை பற்றி நிற்கிறது. கூர்ந்து நோக்கினால் அந்த ஏதோ ஒன்றிலும் இறைவன் இருப்பதால் அந்த ஏதோ ஒன்றில் இருக்கும் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். வடநாட்டிலும், நம் தென்நாட்டிலும் ஆயிரக் கணக்கான மகான்கள் விக்கிரக ஆராதனைகளைச் செய்து மேன்மையடைந்து பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார்கள். ஆரம்ப நிலை பயிற்சியாளர்களுக்கு விக்கிரத ஆராதனை உதவும் என்று விளக்கம் சொல்லும் ஞானிகளும் உண்டு. ஆரம்ப நிலை என்பதுவும் அதற்கு அடுத்த நிலை என்பதுவும் மனம் சார்ந்த விஷயங்களே. எந்த நிலையில் வாழ்ந்தவர்களும் முடிவு நிலை எது என்று தெரியாமலேதான் வாழ்ந்தார்கள். முடிந்தார்கள். இன்றைய அவர்கள் நிலை என்னவென்று யாருக்கும் தெரியாது. விஸ்வரூபமாய் என் கண் முன்னே பிரம்மாண்டமாய், இந்த பிரபஞ்சமாய் காட்சி தரும் பேராற்றல் என் கண் முன்னே அழகிய உருவமுள்ள சிலையாய் நிற்கிறது அவ்வளவுதான். இது வேறு அது வேறு என்று நான் மனதில் நினைப்பதில்லை. எல்லாவற்றிற்கும் மனம்தான் அடிப்படை என்கிற போது, உருவமாகவும், உருவமில்லாமலும் வேறுபட்டு நிற்பது எவ்வாறு ? இறைவன் துண்டு துண்டாய் பிரிக்கப்பட்டிருக்கவில்லை. நான் பார்க்கும் சிலை இறைவனின் ஒரு பகுதி என்றும், எஞ்சிய பகுதி புறத்தே இருக்கிறது என்றும் எனக்குத் தோன்றவில்லை. இந்த பிரமாண்டமான பிரபஞ்சமெங்கும் வியாபித்துள்ள இறையாற்றலே, பூரணமாய் ஒரு சிறிய விக்கிரகத்திலும், ஒரு சிறிய மண் திவலையிலும் கூட வியாபித்திருக்கிறாரே அல்லாது, எவ்வகையிலும் குறைவாய் அல்ல. மழுமழு என்று காணப்படும் சாலக்ராமத்தில் உள்ள ஒளியே கங்கையில் இருந்து எடுக்கப்படும் கரடுமுரடான சிவலிங்கத்திலும் இருக்கிறது. எனவே எனக்கு அப்பேருருவம் தனியாகத் தெரியாதிருப்பினும் பாதகமில்லை.
அமுதக் கடலில் உள்ள இனிமை அதன் ஒவ்வொரு துளியிலும் இருக்கிறது. எனக்கு, என் காட்சிக்குக் கிடைத்த அமுதத் துளியின் இனிமையை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான்.
அமுதத்தை ஏன் உதாரணமாகச் சொன்னேன் ? ஒரு பாலையோ தண்ணீரையோ சொல்லியிருக்கலாமே ? என்றால், ஒரு கிண்ணம் பாலுக்குள்ள ருசியே ஒரு செம்பு பாலுக்கும் இருக்கும். ஆனால், புஷ்டி மாறிவிடும். ஒரு கிண்ணம் பாலை விட ஒரு செம்பு பாலை அருந்தினால் புஷ்டி அதிகமாகக் கிடைக்கும். அமுதத்தின் தன்மை அவ்வாறு அல்ல. அமுதக் கடலின் இனிமை ஒவ்வொரு துளியிலும் இருப்பதோடு, புஷ்டியும் அதே அளவு இருக்கும். அமுதம் ஒரு துளியே அருந்தினாலும் சாகாவரம் கிடைத்துவிடும்.
இவ்வாறே பிரம்மாண்டத்தில் உள்ள அதே அளவு புனிதத் தன்மையும், தெய்வத் தன்மையும் ஒரு சிறிய சிலை வடிவத்திலும் இருக்கிறது. என்னிடம் நீங்கள் ஒரு பிடி அரிசியைக் கொடுக்கும் போது, அதை நான் அரிசி என்று புரிந்து கொள்ளாமல் இருக்கையில், என் முன்னே ஒரு மூட்டை அரிசியைக் கொட்டினால் என்ன பயன் ? இங்கே ஒரு கேள்வியை வைக்கக் கூடும். பிரம்மாண்டமல்ல, எதுவுமற்ற வெறுமையையே நாங்கள் இறைவனாகச் சொல்கிறோம் என்றால், வெறுமையைக் குறிப்பிடுவதன் நோக்கம் என்ன ?அது, இது என்று எதுவுமில்லை எல்லாம் ஒன்றே என்பதே அதன் பொருளே. ஆக, அதையே நான் திருப்பிச் சொல்கிறேன். எல்லாம் ஒன்றே என்கிற போது அந்த சிலையும் அதுவே. வெறுமையாக உருவமே இல்லாமல் இருந்த இறையே கூட தன்னை வெளிக்காட்டிக் கொள்ளத்தான் ஸ்தூலமாக உருவெடுத்துள்ளது என்பதை எண்ணிப் பாருங்கள்.
விக்கிரக ஆராதனையின் நோக்கம் என்னவாக இருக்கும் ? இவ்வளவு உடல் தத்துவங்களையும், வாழ்க்கைத் தத்துவங்களையும் சொன்ன நம் முன்னோர்கள் என்ன முட்டாள்களா ? ஒரு சிறிய பொருளில் அகில சிருஷ்டியையே உணர முயலும் வித்தையே விக்கிரக ஆராதனை. இது கற்பனை அல்ல. நிதரிசனமான, அனுபவத்தில் வந்த உண்மை. பிரம்மாண்டத்தில் உள்ளவை எல்லாம் ஒரு சிறிய விக்கிரகத்திலும், ஒவ்வொரு மண் திவலைகளிலும் அடங்கி இருக்கிறது. அந்த மண் கட்டியின் கீழே மா, பலா, வாழை, கோதுமை, அரிசி, தங்கம், தாமிரம், வெள்ளி எல்லாம் இருக்கிறது. உருண்டு, திரண்ட ஒரு பொருளைப் பார்க்கும் போது நமக்கு இன்பமாக இருக்கிறது. ஏனென்றால் அதில் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அந்த ஒழுங்கு முறை என்பது இறையாற்றலின் தன்மை. அது இறைவனின் உருவம். காட்டில் கோணல்மாணலாக வளர்ந்திருக்கும் மரத்தில் அவனது கட்டுப்பாடற்ற தன்மை தெரிகிறது. ஆண்டவனை யாரால் கட்டுப்படுத்த முடியும் ?
அதைப் போல நேராக நெடிது ஓங்கி நிற்கும் கம்பத்தைக் காணும் போது அதுவும் ஆண்டவனின் பிரம்மாண்டத்தையே உணர்த்துகிறது. சித்திர வேலைப்பாடுகள், நகாசு வேலைப்பாடுகள் அமைந்த தூண்களைப் பார்க்கையில் அதில் வானமும் நட்சத்திரங்களுமாக இறைவன் தெரிகிறான். கத்திரித்து வெட்டிவிடப்பட்ட நந்தவனத்தில் ஆண்டவனின் அடக்கமும், அமைதியுமான உருவம் தெரிகிறது. அழகிய பூங்காவிலும் இன்பம் உண்டாகிறது, கட்டுக்கடங்காத காட்டிலும் இன்பம் உண்டாகிறது. அப்படி என்றால் நாம் என்ன பித்தர்களா ? இல்லை. இரண்டிலும் இன்பம் ஏற்படுவதற்கான காரணம், நம்மிடம் உள்ள இறைவனின் தன்மை அவற்றிலும் உள்ளதினால்தான். ஆண்டவன் எங்கும் வெவ்வேறு பொருள்களிலும் வெவ்வேறு குணங்களின் மூலம் தன்னை வெளிப்படுத்துவதினாலேயே நமக்கு இன்பம் ஏற்படுகின்றது. இதுவும் நம்மைச் சேர்ந்தவையே என்ற உணர்வு நம்மை அறியாமலேயே நமக்குள் பொங்குகிறது.
ஒரு ரிஷி சொல்கிறார் ஆன்மா செக்கச் செவேலென்று பட்டுப் பூச்சியைப் போன்று மிருதுவாய் இருக்குமென்று. அதனால்தான் நமக்கு அதைப் பார்த்ததும் பரவசம் ஏற்படுகிறது. எதற்காக உவமைகளைக் கூறுகிறோம் ? இரண்டு பொருள்களுக்கும் ஒற்றுமை இருப்பதினாலேயே உவமைகளைக் கூறுகிறோம். அதனாலேயே இன்பம் தோன்றுகிறது. உவமேயமும் உவமானமுமான இரண்டு பொருள்களுக்கும் வேறுபாடு இருக்கும் என்றால் இன்பம் தோன்றாது. ஒருவன் உப்பு மிளகாயைப் போலிருக்கிறது என்றால் அவனை நாம் எல்லோரும் பைத்தியம் என்போம். அதே மனிதன் நட்சத்திரங்கள் எல்லாம் பூக்கள் போலிருக்கின்றன என்றால் இன்பமடைகிறோம். இரண்டாவது கூற்றில் இரு பொருள்களுக்கும் காணப்படும் ஒற்றுமை முதல் கூற்றில் உள்ள பொருள்களுக்கிடையே இல்லை. ஆனால், உப்பிலுள்ள பரம்பொருளே மிளகாயிலும் நிறைந்திருக்கிறது என்று எண்ணும் அளவுக்கு ஒருவரது நோக்கு பரந்து விரிந்திருகையில் அவர் உப்பு மிளகாயைப் போல இருக்கிறது என்று சொன்னால் நமக்கு இன்பமே விளையும். நமது நோக்கும் அவ்வாறு பரந்து விரிந்திருப்பது அவசியம். நம் மனம் எதையும் உருவகப்படுத்திப் பார்க்கக் கூடியது. எந்த ஒரு கருத்தை முன் வைத்தாலும் நம் மனம் அதைக் குறித்து ஒரு வடிவத்தை கற்பனை செய்து வைத்துக் கொள்ளும். ஆங்கிலத்தில் அதை இமேஜ் என்பார்கள். எனவே பல உருவங்களைக் கண்டு எண்ணங்களைச் சிதற விட்டுக் கொண்டிருக்கும் மனதை ஒரே உருவத்தில் நிறுத்த விளைவதே விக்கரக ஆராதனை. கீதையில் கண்ணன் சொல்வது என்னவென்றால், எந்த வழியாக இருந்தாலும் மனம் தூய்மையடையாத வரை என்னிடத்தில் வந்து சேர முடியாது. எனவே மற்றவர்கள் போகும் வழியைக் குறித்த கவலையை விடுத்து, நம் வழியில் நாம் மனத் தூய்மையோடு முன்னேற விளைவோமாக
http://jayasekarjai.blogspot.in/

No comments:

Post a Comment