Saturday, October 31, 2015

நோய் ஒன்றே, வழியும் ஒன்றே !!!

இன்றைய உலகில் மனிதனுக்கு ஏறத்தாழ ஐந்தாயிரம் நோய்கள் இருப்பதாக, மருத்துவ உலகம் பட்டியலிட்டு உள்ளது. நாளுக்கு நாள் உலகில் மருத்துவ முறைகள் அதிகரித்தும், மருந்துகள் அதிகரித்தும், மருத்துவர்கள் அதிகரித்தும், மருத்துவமனைகள் அதிகரித்தும், நோய்களின் பட்டியல் மட்டும் குறைவில்லை. மாறாக, நோய்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. எடுத்துக்காட்டாக, முன்பெல்லாம் காய்ச்சல் என்று ஒரே ஒரு காய்ச்சல் நோய்தான் இருந்தது. இன்றைய நாளில், டைபாடு காய்ச்சல், மூளைக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், எபோலோ காய்ச்சல் என காய்ச்சல்களின் பட்டியல் நீள்கிறது.
ஆனால் இயற்கையில் நோய் ஒன்றுதான். அதற்கான தீர்வும் ஒன்றுதான். நோய் பலப் பல அல்ல. தீர்வும் பலப் பல அல்ல. மருத்துவ உலகம் தான் நோய் பற்பல, அதன் தீர்வுயும் பற்பல என இயற்கைக்கு மாறாகக் கூறி, மனிதரைத் திசைத் திருப்புகிறது. மனிதரும் திசை மாறிய பறவை மாதிரி, திண்டாடுகின்றனர்.. உதாரணமாக, ஒரு பலவீனமான இருசக்கர மிதிவண்டி டியூபில் காற்றடித்தால், அந்த டியூபின் எந்தப்பக்கம் பலவீனமாக உள்ளதோ, அந்தப் பக்கம் புடைக்கும். ஆனால் டியூபில் பஞ்சர் இல்லை, காற்றும் வெளியேறவில்லை. இதுபோல், உலக மனிதர் அனைவரும் தானியத்தைத் தான் சமைத்துப் பிரதான உணவாக உண்டு வருகின்றனர். அரிசி, கோதுமை, கம்பு, ராகி மற்றும் இதர சிறுதானிய உணவுடன், துணை உணவாகக் காய்கறி, கீரை, மற்றும் மீன், கோழி, இறைச்சி, முட்டை, பால், பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் முதலியவற்றையும் மசாலாப் பொருட்கள் சேர்த்து சமைத்து உண்டு வருகின்றனர். இத்தகைய உணவுகள் எல்லாம் கழிவு உணவுகள். தூய்மை இல்லாது, அழுக்கு நிறைந்தவை. எனவே இத்தகைய உணவில் உள்ள கழிவுகள், ஒருவருக்கு எலும்பு, நரம்பு பலவீனமாக இருந்தால், எலும்பு நரம்புகளில் படிந்து எலும்பு நரம்பு நோய் என மருத்துவ உலகம் நோயைப் பிரிக்கின்றது. இதுபோல் இதயம் பலவீனமாக இருந்தால் இதயத்தில் படிந்து இதயநோய், நுரையீரல் பலவீனமாக இருந்தால் நுரையீரலில் படிந்து நுரையீரல் நோய், மூளை நோய், கல்லீரல் நோய், கணைய நோய், இரைப்பை நோய், கண் நோய், பல் நோய், காது நோய், விதை வீக்கம் நோய், எனப் பல்வேறு நோய்களுக்கும் ஒவ்வொரு நோய்க்காக மருந்துகள், மருத்துவம், அறுவைச் சிகிச்சை எனப் பல்வேறு சிகிச்சைகளையும் ஏற்படுத்தி வருகின்றது.
கழிவுகளின் தேக்கமே நோய், கழிவுகளை வெளியேற்றுவதே மருத்துவம்
நாம் உண்ணும் உணவு, அருந்தும் பானம் இவைகளில் உள்ள கழிவுகளின் வழிகளில் தேக்கம் தான் நோய்; கழிவுகளை இயற்கை வெளியேற்றுவது தான் மருத்துவம். பின் வருமுன் காப்போம் எனும் உடலியக்க விதிப்படி, கழிவுகள் இல்லாத உணவையும், பானத்தையும் படிப்படியாகவோ, அல்லது விரைவாகவோ அவரவரது மன உறுதிக்கேற்ப மாற்றி உண்டு, அருந்தி வாழ்வது தான், கழிவுகள் தேங்க வாய்ப்பில்லாது, நிரந்தரமாக நோயின்றி வாழும் வழியாகும்.
கழிவுகள் இல்லாத, கழிவுகள் தேங்க வாய்ப்பில்லாத உணவு, இயற்கை உணவுகள் தான்; பானம், இயற்கை பானங்கள் தான். இவ்வாறு உடலில் கழிவுகள் தேங்க வைக்கும் அனைத்து சமைத்த செயற்கை உணவுகளையும், செயற்கை பானங்களையும் உண்ண, அருந்த மறுத்து, கழிவுகள் தேங்க வைக்காத இயற்கை உணவுகளை நன்கு பசித்த போது, நன்கு மென்று உண்டு, இயற்கை பானங்களை அருந்தி வாழ முயலுவதுதான் நோயின்றி வாழும் முயற்சிகள், வழிமுறைகளாகும். இதற்கு மருத்துவம் தேவையில்லை; மருந்துகள் தேவையில்லை. மருத்துவர்கள் தேவையில்லை.
இவ்வாறாகத்தான் உயர்திணை உயிரினமாகிய மனிதரைத் தவிர, மனிதரை விடக் கீழான ஐந்தறிவு, நாலறிவு, மூன்றறிவு, இரண்டறிவு, ஓரறிவு உள்ள அனைத்து அஃறிணை உயிரினங்களும் தத்தமக்குரிய இயற்கையுணவை உண்டு, இயற்கை பானம் அருந்தி, இயற்கையோடு இயைந்த வாழ்வு, தனது உயிரினம் தோன்றிய நாளிலிருந்து இன்று வரை வாழ்ந்து வருகின்றன. நமக்கு வழிகாட்டிகளாக வாழ்கின்றன. அவைகட்கு மழையில் நனைந்தால் ஜலதோஷமில்லை. வெயிலில் அலைகையில் தலை வலி இல்லை. உடல் வலியில்லை. உடலில் எந்தவித நோயுமில்லாமல் எவ்வித மருந்தையோ, மருத்துவரையோ மருத்துவத்தையோ மருத்துவமனையையோ நாடாது, நோய்க்கு நிரந்தரமாகவே இடம் கொடுக்காமல் வாழ்ந்து வருகின்றன. குளிர் தாங்க இயலாது ஆடையோ, கம்பளியோ இன்றி, குளிர்காலத்தில் உதகமண்டலத்திலும், கொடைக்கானலிலும் மற்றும் இதர மலைப் பிரதேசங்களிலும், கட்டிடமே இல்லாது குளிர் தாங்கி, மனிதரைவிட அனைத்து வகைகளிலும் உடல், உயிர் ஆற்றலோடு வாழ்ந்து வருகின்றன.
ஆறறிவு படைத்த மனிதராகிய நாமோ, மழையில் நனைந்தால் ஜலதோஷம் (உடலில், தோஷமுள்ள சமைத்த உணவை உண்டு, தோஷத்தை வைத்துக் கொண்டு, தோஷமில்லாத ஜலத்தில் தோஷம் எனக் கூறிவருகிறோம்), எனக் கூறுகிறோம். கழிவுகள் நிறைந்த சமையலுணவில் உலக மாந்தர்கள் எல்லாம் உயிர் வாழ்வதால், வெயிலில் அலையும் போது, உடலிலுள்ள கழிவுகள் தலைவலி (பிரசவ வலி போல்) எனும் ரூபத்தில் வெளியேறுகின்றன. உடல் தன்னைத் தானே குணப்படுத்திக் கொள்கிறது. (Body heals itself) எனும் இயற்கை உயிரியல் படி, தண்ணீர் உடலிலுள்ள சளி எனும் தோஷத்தையும், சூரிய ஒளி (வெயில்) உடலிலுள்ள கழிவுகளை தலைவலி எனும் உபாதை மூலம் வெளியேற்றும் நல் நிகழ்வுகளை, நோய் எனக் கருதி மருந்தை நாடி, அக்கழிவுகள் வெளியேறா வண்ணம், மருந்து மூலம் உடலுக்குள் அமுக்கித் தேங்க வைத்து, பின் நாட்களில் அதன் விளைவாக கடுமையான நோய்களுக்கு ஆளாகிறோம்.
மனிதருக்குரிய இயற்கையுணவு, உயரமான, வலுவான மரங்களிலிருந்து கிடைக்கும் தேங்காயும் (தெங்கன்பழம்), அனைத்துப் பழ வகைகளுமேயாகும். இயற்கை பானம், பச்சைத் தண்ணீரேயாகும். கொதிக்க வைத்து ஆறிய தண்ணீரல்ல. குளோரின் போட்டு சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரல்ல.
எனவே ஆருயிர் உலக மானிட உடன் பிறப்புக்களே, நோயின்றி வாழவும், எத்தகைய நோயையும் மருத்துவமின்றி, பக்க விளைவுகள் இன்றி அறுவை சிகிச்சை இன்றி, மருத்துவப் பரிசோதனை இன்றி, இயன்ற வரையில் முற்றிலும் அல்லது பெரும்பாலும் நமக்குரிய இயற்கை உணவாகிய தேங்காய், பழ வகைகள் ஆன உணவை உண்டு, இயற்கையோடியைந்து இயற்கை வாழ்வு வாழ்ந்து, இன்னலின்றி, துயர் இன்றி ஆரோக்கிய ஆனந்த வாழ்வு நிரந்தரமாக வாழ முயலுவோம். மரணமில்லாப் பெருவாழ்வு இலக்கை அடையும் வழியும் இதுதான். விதியை மதியால் வெல்லும் மதியும் இதுதான்.
உலகை நல் உலகாக உண்டாக்க எத்தனையோ புரட்சிகள் (வெண்மைப் புரட்சி, பசுமைப் புரட்சி, அமைதிப் புரட்சி மற்றும் பிற ) தோன்றியது போல் இயற்கை உணவைப்புரட்சி இயற்கை வாழ்வுப் புரட்சி மலர்ந்து, நம்மையும் பிற உயிரினங்களையும் இப்பிரபஞ்சத்தையும் அமைதியாகக் காக்க முயலுவோம்! ஒன்றுபடுவோம். அணி திரள்வோம்.
By டாக்டர் அப்பன்
தொடர்புக்கு - டாக்டர் அப்பன்: 9380873645, 9944042986

No comments:

Post a Comment