Saturday, October 31, 2015

மனிதனுடைய மரணத்துக்குக் காரணம்?

தமிழகத்தில் வாழ்ந்த, சித்த வேதத்தைத் தோற்றுவித்த ‘காகபுஜண்டர்’ எனும் சித்தர், மனிதருக்கு மரணம், நெஞ்சுச் சளி, தொண்டைச் சளி, மண்டைச் சளி ஆகியவற்றால்தான் ஏற்படுகின்றது என்றும், இச்சளிகள் மனிதனது உடலில் இல்லையென்றால், மரணமில்லை என்றும் கூறியுள்ளார். அவ்வாறாயின், மனிதருக்கு மட்டும் நெஞ்சுச்சளி, தொண்டைச் சளி, மண்டைச் சளி ஏன் வருகின்றது?
பால், பால் பொருட்களான தயிர், மோர், வெண்ணெய், நெய் ஆகிய உணவுகளும், அனைத்து அசைவ உணவுகளும், சமைத்த தானிய உணவுகளும், உப்பும் நாம் தினமும் சாப்பிடுவதால்தான் நமது உடலில் நெஞ்சுச் சளி, தொண்டைச் சளி, மண்டைச் சளி உண்டாகிறது. இவை எல்லாம் வெளியேறாது அங்கேயே தங்கி, நாள்பட்டு மிகுதியாகி மனிதருக்கு இறப்பை ஏற்படுத்துகின்றது. உப்பு சேர்க்காமல் சமைத்த காய்கறிகள், கீரைகள் உண்பதால் உடலில் சளி உண்டாகாது. மேலும் படிப்படியாக அல்லது எடுத்த எடுப்பிலேயே அனைத்து சமையல் உணவுகளையும் தவிர்த்து, சமைக்காத இயற்கை உணவுகளான தேங்காயும், பழவகைகளையும் உணவாக எடுத்துக்கொண்டு வாழ ஆரம்பிக்கும்போது, உடலில் உள்ள அனைத்து சளிகளும் படிப்படியாக உடலிலிருந்து வெளியேறிவிடும். அதன்பின், சளி இல்லாத வலி இல்லாத நோயில்லாத, இறப்புக்கு வாய்ப்பில்லாத உறுதியான உடலாக அந்த உடல் மாறிவிடும்.
உணவுப் பழக்கத்தைத் தவிர உடலை மேலும் உறுதியுடன் ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ள உதவுபவை யோகாசனம், பிராணயாமம், தியானம். தினந்தோறும் இவற்றைச் செய்வதன் மூலமும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ வாய்ப்பு அதிகம் உள்ளது. அவ்வப்போது விரத நாட்களில், அல்லது வாய்ப்பு ஏற்படும் நாட்களில், நீர் உண்ணா நோன்பு அல்லது சாறு உண்ணா நோன்பு மேற்கொள்வதன் மூலமும் மரணமில்லாப் பெருவாழ்வை அடைய முயற்சி செய்யலாம்.
நீர் உண்ணா நோன்பு என்றால், பசித்தபோதெல்லாம், அல்லது தேவை ஏற்படும்போதெல்லாம் எதுவும் சாப்பிடாமல், தூய்மையான குடி தண்ணீர் மட்டும் தேவையான அளவு அருந்துதல் வேண்டும். இப்படி எத்தனை நாட்கள் தொடர்ந்து வெறும் பச்சைத் தண்ணீரைக் குடித்து வாழ முடியுமோ அதுவரை வாழ்வதாகும்.
சாறு உண்ணா நோன்பு என்றால், பசித்தபோதெல்லாம் அல்லது தேவை ஏற்படும்போதெல்லாம் எதுவும் சாப்பிடாமல், இளநீர், எலுமிச்சம் பழச்சாறு + பச்சைத் தண்ணீர் + தேன் கலந்து, திராட்சைப் பழச்சாறு, ஆரஞ்சு சாறு, தேங்காய்ப் பால், பேரீச்சைப் பழச்சாறு, மாதுளம் பழச் சாறு மற்றும் இதர பழச்சாறுகளில் ஏதேனும் ஒன்றை ஒருவேளைக்கு அருந்தி, மற்ற வேளைகளில் மற்ற பழச்சாறு என அருந்தி இயன்ற நாட்கள் வரை வாழலாம்.
இவ்வாறு உண்ணா நோன்பு மேற்கொள்வதன் மூலம், உடலில் தேங்கியுள்ள சளிகள், கழிவுகள், நச்சுகள் உடலிலிருந்து வெளியேறும். உண்ணா நோன்பு முடியும்பொழுது, நன்கு பழுத்த பழ வகைகள் சாப்பிட்டபின் தேங்காயும், பழ வகைகளும் உணவாக உண்டு, தூய பச்சைத் தண்ணீர், அல்லது இளநீர், அல்லது பழச்சாறு மட்டும் உடலுக்குத் தேவைப்படும்போது அருந்தி வாழ்வதன் மூலமும் மரணமில்லாப் பெருவாழ்வு வாழ முயலலாம். காபி, தேயிலை, பால், மோர், மற்றும் பிற பானங்கள் முழுவதையும் அருந்துவதை முற்றிலும் தவிர்த்தலும் மரணமில்லாப் பெருவாழ்வுக்கு இன்றியமையாததாகும்.
மரணமில்லாப் பெருவாழ்வுக்கு வள்ளலார் சுவாமிகள் கூறும் வழிமுறைகளைப் பற்றியும் சிந்திப்போம். மனிதரது உடல் அழிய நான்கு காரணங்கள் உள்ளன. அவை 1. உணவு, 2. உறக்கம், 3. உழைப்பு, 4. மைதுனம் எனக் கூறுகிறார்.
இயற்கைக்கு மாறாக சமைத்து உண்பதன் மூலம் மனிதருக்கு நோய் ஏற்பட்டு, உடலும் உயிரும் அழிகிறது. சமைத்துண்ணும் பழக்கத்தினால், மனிதன் மட்டும் கும்பகர்ணன் போன்று குறட்டைவிட்டு, ஆழ்ந்த உறக்கம் கொள்கிறோம். இவ்வாறு உறங்குவதால், உடல் அழிகிறது. பிற உயிரினங்களான விலங்குகள், பறவைகள், மற்றும் இதர உயிரினங்கள் சமைத்து உண்பதில்லை. இயற்கையாக உண்கின்றன; இயற்கையாக வாழ்கின்றன. எனவே, அவையெல்லாம் தூங்காமல் தூங்கி சுகம்பெற்று வாழ்கின்றன. நாம் மட்டும் தூங்காமல் தூங்கி சுகம் பெறுவது எக்காலம் எனப் புலம்பித் திரிகின்றோம். சமைத்து உண்பதால், நாம் மட்டும் இரவு, பகலாகக் கடின உழைப்பு செய்து பணம் சம்பாதிக்கிறோம். இவ்வாறு, கடின உழைப்புக்குப் பின்னர் நமது உடலும் உயிரும் அழிகிறது. சமைத்து உண்பதால், நாம் மட்டும் மிகுதியான மைதுனம் (உடலுறவு) கொள்கிறோம். அதனாலும்கூட நமது உடலும் உயிரும் அழிகிறது.
மேலும் தமிழ்நாட்டில் வாழ்ந்த மகாகவி பாரதியாரும்,
தேடிச் சோறு நிதந்தின்று – பல
சின்னஞ் சிறுகதைகள் பேசி – மனம்
வாடித் துன்பம் மிக உழன்று – பிறர்
வாடப் பல செயல்கள் செய்து – நரை
கூடிக் கிழப் பருவம் எய்தி – கொடுங்
கூற்றுக் கிரையெனப் பின்மாயும் – பல
வேடிக்கை மனிதரைப் போலே – நான்
வீழ்வேனென்று நினைத்தாயோ!
என, வெந்த உணவாகிய சோறு தினம் தின்று, கொடுங்கூற்றுக்கு இரையெனப் பின் மாயும் – இறக்கும் பல வேடிக்கை மனிதர் என நெருப்பில் வெந்த உணவைத் தின்பதால் மனிதருக்கு மரணம் ஏற்படுகின்றது எனத் தீர்க்க தரிசனமாகக் கூறியுள்ளார்.
அடுத்து ‘அலெக்ஸ் கேரல்’ எனும் வெளிநாட்டு உயிரியல் அறிஞர், தனது ‘Man The Unknown’ (மனிதன் புரியாத புதிர்) எனும் நூலில், ஒரு ஆய்வின் மூலம், ‘மனிதன் மரணமில்லாதவன்; மனிதனது மரணத்துக்குக் காரணம், 1. உள் விபத்து; 2. வெளி விபத்து. இவ்விரு விபத்துகளும் இல்லையென்றால், மனிதனுக்குச் சிறிது கூட மரணமேற்பட வாய்ப்பில்லை’ எனத் தெளிவாகக் கூறியுள்ளார்.
அவர் செய்த உயிரியல் ஆய்வின் விவரம் -
ஒரு கோழிக்குஞ்சின் இதயத்தின் சதைத் துண்டை அறுத்தெடுத்து, அதை ஒரு சோதனைக் குழாயில் போட்டார். அச்சதையிலுள்ள செல்கள் உயிருடன் இயங்க, ஒரு நுண்ணூட்டத் திரவத்தை அச்சோதனைக் குழாய்க்குள் ஊற்றினார். அச்சதையின் செல்களின் கழிவுகள் வெளியேறும் வண்ணம் அதற்குரிய ஒரு திரவத்தையும் அச்சோதனைக் குழாய்க்குள் ஊற்றினார். எனவே, கோழிக்குஞ்சின் இதயத் தசையில் உள்ள செல்கள் உயிருடன் இயங்கவும், செல்களிலிருந்து கழிவுகள் வெளியேறவும் உரிய திரவங்களை ஊற்றி, ஒரு நுண்பெருக்குக் கண்ணாடி மூலம், அச்செல்களின் இயக்கத்தைக் கவனித்தார். தொடக்கத்தில், அச்செல்களின் இயக்கம் எவ்வாறு இருந்ததோ, பல ஆண்டுகள் ஆகியும் அந்தச் செல்களின் இயக்கம், சிறிதுகூட குன்றவில்லை. மாறாக எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தொடக்கத்தில் இருந்த இயக்கமே இருந்தது.
இதிலிருந்து அவர் ஒன்றைச் சிந்தித்தார். ஒரு கோழிக்குஞ்சின் செல்லுக்கே, உரிய நுண்ணூட்டமும், கழிவுகள் வெளியேறவும் வாய்ப்புக் கொடுத்தால், திறமையுடன் குன்றாது செல் இயங்கினால், மனிதரது செல், கோழிக்குஞ்சின் செல்லைவிட மிகவும் அளப்பரியது. திறமை வாய்ந்தது. பேராற்றலுடையது. மிகவும் வலுவானது. எனவே, மனிதரது செல்களும் திறமையாக இயங்கத் தகுந்த நுன்ணூட்டமும், கழிவுகள் வெளியேறுவதற்கும் உரிய தக்க வாய்ப்பளித்தால், மனிதரது செல்லும் சிதையாது. வளர்ச்சி குன்றாது, இறக்காது. மனிதரது செல்கள் இறக்காமல் இருந்தால், மனிதருக்கும் மரணமில்லை (Man is immortal). மாறாக மரணம் வந்தால், உயிருக்கு ஒவ்வாத உணவுகளை உண்டு உள் விபத்து ஏற்பட்டு மரணம் வரலாம். அல்லது வெளி விபத்து ஏற்பட்டு மரணம் வரலாம். இல்லையேல் மனிதனுக்கு மரணமே இல்லை. மரணமில்லாப் பெருவாழ்வு உள்ளது எனக் கூறியுள்ளார்.
‘ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்’ - இது குறள் கூறும் கருத்து.
By டாக்டர் அப்பன்

No comments:

Post a Comment