Saturday, September 20, 2014

திருமூலரிடம் சீடராகவிருந்த போகர் கற்ப மூலிகைகள் என்ற தலைப்பில் கூறிய பாடலாகும்

கற்ப மூலிகைகள்
• "கேளென்ற 1கருநெல்லி, 2 கருத்த நொச்சி
• கெடியான, 3 கருவீழி, 4 கருத்த வாழை
• காளென்ற, 5 கரிய கரிசா லையோடு
... • 6 கருப்பான நீலியோடு, 7 கரியவேலி
• கோளென்ற 8 கரூமத்தைத் 9 தீபச் சோதி
• 10 கொடு திரணச் சோதி 11 சாயா விருட்சம்
• ஏளென்ற 12 எருமை கனைச்சான் 13 ரோமவிருட்சம்
• ஏற்றமாம் 14 சுணங்க விருட்சம் 15 செந்திரா" (1)
• "செந்திராய் 16 செங்கள்ளி 17 செம்மல்லி யோடு
• 18 சிவந்தக றறாழை 19 செஞ்சித்திர மூலம்
• நந்திராய்சிவப்பப்பா மார்க்கத்தோடு
• நலமான 20 கற்பிரபி 21 கறசேம் பாகும்
• பரந்திராய் 22 கல்லுத்தா மரையி னோடு
• பாய்ந்த 23 குழல் ஆ தொண்ட 24 மகாபொற்சீந்தல்
• 25 வெந்திராய் 26 வெண்புரசு 27 வெள்ளைத் துத்தி
• மிகு 28 வெள்ளைத் தூதுவளை மிடுக்குமாமே" (2)
• "மிடுக்கான குண்டலமாம் 29 பாலை யோடு
• 30 வெள்ளை நீர்முள்ளி 31 வெண்விண்டுக் காந்தி
• கடுக்கான 32 வெண்கண்டங் காரி யோடு
• 33 கசப்பான பசலையோடு 34 மதுர வேம்பு
• கிடுக்கான 35 கிளிமூக்குத் துவரை 36 அமுகண்ணி
• கெடியான 37 பொன்மத்தை 38 மதுர கோவை
• படுக்கான 39 பொன்வன்னச் சாலியோடு
• 40 பாங்கான கருந்தும்பை 41 மதனத் தண்டே" (3)
• "தண்டொடு 42 மூவிலையாம் குருத்துமாகும்
• தணலான 43 சிவத்ததில்லை 44 கருத்த வேம்பு
• 45 இண்டோடே இவ்வகைகள் நாற்பத் தைந்தும்
• ஏற்றமாம் மலைகளிலே மிகுதி உண்டு
• பண்டோடு பாடாணம் அறுபத்து நாலும்
• பட்டுடனே கட்டுண்டு படுதீப் பற்றும்
• துண்டோடு சூதமது கட்டும் ஆகும்
• சுயம்பான உபரசங்கள் சத்தும் ஆமே." (4)
• "சத்தான மூலிகையில் சுருக்குச் சித்தி
• சாப்பிட்டால் மண்டலந்தான் சாவோ இல்லை
• மத்தான மன்மதன்போல் தேகமாகும்
• மாசற்று நரைதிரைகள் எல்லாம் மாறும்
• எத்தான வாசியெல்லாம் இறுகிப் போகும்
• ஏறலாம் சுகனத்தில் ஏற்றமாக
• அத்தான அடுக்கெல்லாம் சோதித்தேறி
• அண்டரண்டபதமெல்லாம் அறிய லாமே." (5)
இப்பாடலின் படி நாற்பத்தைந்து கற்ப மூலிகைகளினைக் கூறியுள்ளார்.மேலும் இம்மூலிகைகளினை முறையாக உட்கொள்ளுபவர்களிற்கு சாவு இல்லை என்றும் மேலும் மன்மதன் போல அழகுடைய மிடுக்கான வாலிபத்தோற்றம் இருக்கும் என்றும் கூறியுள்ளார்.
நன்றி :-http://sitharsemmozhi.blogspot.in/

கடுவளி சித்தர்

"நந்தவனத்தில் ஓர் ஆண்டி:
கடுவளி சித்தர் என்று ஒரு சித்தர் இருந்தார்.
அவர் பாடிய பாடல் இது.
"நந்தவனத்தில் ஓர் ஆண்டி - அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி"
மேலெழுந்தவாரியாகப் பார்த்தால் இது சாதாரண வேடிக்கை பாடல் போல தோன்றும். ஆனால் வாழ்க்கையின் உன்னதமான ஒரு தத்துவத்தை கடுவளி சித்தர் நான்கு வரிகளில், எளிய வார்த்தைகளில் மிக அற்புதமாக விளக்கியுள்ளார்.
மனித ஜீவன் ஓர் ஆண்டியாக இந்த பாடலில் உவமிக்கப் பட்டு இருக்கிறது.
இங்கே படைப்புக்குரியவன் குயவன் என்று சொல்லப்பட்டு இருக்கிறான்.
ஜீவன் என்கின்ற ஆண்டி படைப்பிற்குரிய குயவனிடம் சென்று"நா லாறு மாதமாய்" அதாவது பத்து மாதமாய் வேண்டிக்கொண்டதன் விளைவாக, படைப்பிற்குரிய குயவன் ஆண்டியிடம் உடல் என்கிற தோண்டியை ஒப்படைக்கிறான். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள்.
ஜீவன் இறைவனிடம் வேண்டிக் கொண்டதன் விளைவாக, அதற்கு ஒரு உடலை இறைவன் உருவாக்கிக் கொடுக்கிறான். ஜீவன் இறைவனிடம் வேண்டிப்பெற்ற உடலுடன் மனிதனாக உலகத்தில் நடமாடத் தொடங்கிவிட்டது. இந்தத் தோண்டியை சரியான காரணத்திற்கு பயன்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் தான் குயவன் செய்து கொடுத்தான்.
தோண்டி கிடைத்தவுடன் ஆண்டி என்ன செய்தான்? கண் மண் தெரியாமல் கூத்தாடினான், தோண்டியை போட்டும் உடைத்தான், ஆகவே தோண்டி கொடுக்கப்பட்டதன் நோக்கம் நிறைவேற வில்லை, தோண்டியை தவறாக பயன்படுத்தி உடைத்து விடுகிறான் ஆண்டி.
ஆகவே, ஜீவாத்மா இறைவனிடம் வேண்டித்தான் இந்த உடலைப் பெற்று இருக்கிறது.
அப்படிப் பெற்ற உடலை தவறான வழிகளில் பயன்படுத்தி விடுகிறார்களே என்ற கவலையினை வெளிப்படுத்துகின்றார் கடுவளி சித்தர் இந்தப்பாடலில்...!!
(நன்றி:சித்தர்கள் இராஜ்ஜியம்)

தினமும் ஆயில் புல்லிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்.

ஆயில் புல்லிங் என்பது ஒரு ஆயுர்வேத சிகிச்சை முறை. இந்த சிகிச்சை முறையின் மூலம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வுகளைக் காணலாம். ஒயில் புல்லிங் என்பது வேறொன்றும் இல்லை, காலையில் எழுந்ததும், வெறும் வயிற்றில் வாயில் எண்ணெயை ஊற்றி 10-15 நிமிடம் கொப்பளிக்க வேண்டும், அவ்வளவு தான்.
மேலும் ஆயில் புல்லிங் செய்த பின்னர் தான் பிரஷ் செய்ய வேண்டும். அதிலும் ஆயில் புல்லிங் செய்வதற்கு நல்லெண்ணெயைப் பயன்படுத்தினால், இன்னும் நல்ல பலனைப் பெறலாம். மேலும் ஆய்வு ஒன்றில், ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாய் ஆரோக்கியம் மேம்படும் என்று சொல்கிறது. ஆனால் ஆயில்புல்லிங்கினால் வாய் ஆரோக்கியம் மட்டுமின்றி, உடலின் நோயெதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, உடலில் ஏற்படும் ஒருசில பிரச்சனைகளையும் குணப்படுத்தி, ஒட்டு மொத்த உடல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தலாம்.
அதுவும் தற்போதுள்ள ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையில், இந்த ஆயில் புல்லிங் சிகிச்சையை ஒருவர் தினமும் தவறாமல் செய்து வந்தால், உடல்நலத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம். சரி, இப்போது அந்த ஆயில் புல்லிங்கை தினமும் செய்து வந்தால் கிடைக்கக்கூடிய ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி பார்ப்போமா!
வெள்ளையான பற்கள் மற்றும் ஆரோக்கியமான ஈறுகள்
தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், பற்களில் உள்ள கறைகள் நீங்கி, பற்கள் வெள்ளையாகவும், ஆரோக்கியமானதாகவும் காணப்படும்
வாய் துர்நாற்றம்
தினமும் காலையில் ஆயில் புல்லிங் செய்து வந்தால், வாயில் உள்ள கிருமிகள் அனைத்தும் வெளியேறி, வாய் துர்நாற்றம் அடிக்காமல் இருக்கும்.
ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவு
ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்பட்டால், ஆயில் புல்லிங் செய்தால், இரத்தக்கசிவு ஏற்படுவது தடுக்கப்பட்டு, ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.
உடலின் எனர்ஜி அதிகரிக்கும்
ஆயில் புல்லிங்கை தினமும் செய்தால், உடலின் ஆற்றலானது அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கலாம்.
ஒற்றை தலைவலி
ஒற்றை தலைவலியால் அவஸ்தைப்படுபவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அந்த தொல்லையில் இருந்து விடுபடலாம்.
சைனஸ்/ஆஸ்துமா
சைனஸ்/ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்தால், இந்த பிரச்சனைகள் குணமாகும்.
நிம்மதியான தூக்கம்
தூக்கமின்மையால் அவஸ்தைப்படுபவர்கள் ஆயில் புல்லிங் செய்தால், இரவு நேரத்தில் நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
பொலிவான சருமம்
ஆயில் புல்லிங் செய்தால், உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, சருமம் பொலிவோடு இருக்க உதவும்.
தைராய்டு
தைராய்டு உள்ளவர்கள், ஆயில் புல்லிங் செய்து வந்தால், தைராய்டு ஹார்மோனை சீராக சுரக்க செய்து, தைராய்டு பிரச்சனையைக் கட்டுப்பாட்டுடன் வைக்கலாம்.
பார்வைக் கோளாறு
பார்வைக் கோளாறு இருந்தால், ஆயில் புல்லிங் செய்து வர, பார்வைக் கோளாறானது சரியாகும்.
மூட்டு பிரச்சனைகள்
மூட்டுகளில் பிரச்சனை உள்ளவர்கள், தினமும் ஆயில் புல்லிங் செய்து வந்தால், அது மூட்டுகளில் ஏற்படும் வீக்கம், வலியை குணமாக்கும்.
சிறுநீரக செயல்பாடு
தினமும் ஆயில் புல்லிங் செய்தால், சிறுநீரக கோளாறு ஏற்படாமல், சிறுநீரகமானது சீராக செயல்படும்.

Tuesday, September 16, 2014

அழிவில்லா ஆரோக்கியம் தரும் மஞ்சளின் மகிமை

ஜெயாசுந்தரம்
40 வயது ஆனதும் மார்பகப்புற்றுநோய், கர்பப்பையில் புற்றுநோய் என்றெல்லாம் வருகிற காலமிது. வருமுன்பே இந்த நோய்களைத் தடுக்க மஞ்சள் உதவுகிறது. பல ஆராய்ச்சிகளின் மூலம் மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு புற்றுநோய்க்கு எதிராகச் செயல்பட்டு நம்மையும், நம் ஆரோக்கியத்தையும் காப்பது உண்மையே.
இந்த மஞ்சள், பொதுவாக நம் உணவில் பொடியாகச் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இந்தப் பொடிகளில் கலப்படம் இருப்பதற்கான வாய்ப்பும் அதிகம். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மஞ்சள் தைப்பொங்கலின் போது மட்டும் தான் கிடைக்கும்.
ஆனால் இதே மஞ்சள் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர்(கோல்ஹாப்பூர்) மாவட்டத்தில் வருடம் முழுவதும் விளைகிறது.
எனவே இங்குள்ள மக்கள் இதை ஊறுகாயாக செய்து அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுகிறார்கள். தமிழகத்தில் பொங்கல் வரும் சமயம் இது. எனவே நம் தமிழ்ச் சகோதரிகள் பொங்கல் சமயத்தில் கிடைக்கும் பசுமஞ்சளை, ஊறுகாயாகச் செய்து பயன்படுத்தி உடல் நலனை பாதுகாத்துக் கொள்ளலாமே.
நம் தமிழ்ச் சகோதரிகளுக்காக மஞ்சள் ஊறுகாய் செய்யும் மூன்று விதமான செய்முறைகளை கீழ்கண்டவாறு விளக்குகிறேன்.
செய்முறை 1:
தேவையான பொருட்கள்:
பசுமஞ்சள்- 100 கிராம்
எலுமிச்சம் பழம்- 2
பச்சைமிளகாய் -1
தாளிக்க – நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி
கடுகு- ½ தேக்கரண்டி
பெருங்காயம்- 2 சிட்டிகை
உப்பு – ஒரு தேக்கரண்டி
செய்முறை:
முதலில் மஞ்சளை நன்றாகக் கழுவி விட்டு பின்பு தோல்சீவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய மஞ்சளில் உப்பைப் போட வேண்டும். அடுப்பில் எண்ணெய் வைத்து கடுகு தாளித்து, பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு, இத்துடன் பெருங்காயத்தூளையும் போட்டு சற்று பிரட்டிய பின் மஞ்சளில் போட்டு விடவும். எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து மஞ்சளில் நன்றாகக் கலக்கினால், உடனடியாக மஞ்சள் ஊறுகாய் தயார். அதிகபட்சம் இந்த ஊறுகாயை இரண்டு நாட்கள் வைத்துக்கொள்ளலாம்.
செய்முறை:2
தேவையான பொருட்கள்:
பசுமஞ்சள்- 100 கிராம்
நல்லெண்ணெய்- 100 கிராம்
மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி
பொடி உப்பு- 2 தேக்கரண்டி
கடுகு- ஒரு தேக்கரண்டி
வறுத்த வெந்தயப்பொடி- 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
செய்முறை:
மஞ்சளை நன்றாகக் கழுவி தோல் சீவி பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்ததும் பெருங்காயத்தூள் போடவும். பின்பு நறுக்கிய மஞ்சளைப் போட்டு சற்று லேசாக வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், உப்பு, வெந்தயப்பொடி எல்லாவற்றையும் கலந்து ஒரு முறை வதக்கவும். நன்கு ஆறியதும் காற்றுப் புகாத உலர்ந்த பாட்டிலில் வைக்கவும். ஒரு வாரம், பத்து நாள் வரை இந்த ஊறுகாய் நன்றாக இருக்கும்.
செய்முறை:3
தேவையான பொருட்கள்:
பசுமஞ்சள்- 100 கிராம்
நல்லெண்ணெய்- 100 கிராம்
மிளகாய்தூள்- 2 தேக்கரண்டி
உப்பு- 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வறுத்த பொடித்த வெந்தயத்தூள்- 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை
செய்முறை:
மஞ்சளை நன்றாகக் கழுவி நறுக்கி மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, பெருங்காயத்தைப் போடவும், கடுகு வெடித்ததும் அரைத்து வைத்துள்ள மஞ்சள் விழுதைப் போட்டு சற்று வதக்கவும். பின் உப்பு, மிளகாய்த்தூள், வெந்தயத்தூள் போட்டு எண்ணெய் நன்றாகப் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும். இந்த மஞ்சள் தொக்கும், காற்றுப் புகாத உலர்ந்த பாட்டில்களில் வைக்கும் பொழுது ஒரு வாரம், பத்து நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
இந்த மூன்று முறைகளில் எது வசதியானதோ அதைச் செய்து வைத்துக்கொண்டு உணவோடு கலந்து உண்பதன்மூலம் புற்றுநோய் என்றும் கொடிய நோயிலிருந்து நிச்சயமாக நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பது உண்மையே.

Monday, September 15, 2014

மனித உடல் ரகசியங்கள்

சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்
மனிதன், பஞ்ச பூதங்கள் எனப்படும் நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகியவற்றின் தன்மையால் ஆனவன். மனிதன், குழந்தையாகப் பிறந்து நிலத்தில் உழல்கிறான். உணவுப் பொருள்களில் நீரைச் சேர்த்து, நெருப்பில் இட்டு சுவையாக அருந்தி, இதமாக வருடிச் செல்லும் காற்றைச் சுவாசிக்கிறான். சந்தோஷமாக,வளமான வாழ்க்கையில் தன்னை மறந்த நிலையில் அவன் ஆகாயத்தில் ஆனந்தமாகப் பறக்கிறான்.
ஒரு மனிதனை, பஞ்ச பூதங்கள் அரவணைத்துச் சென்றால் அவன் வாழ்கிறான் இல்லையெனில், நிலத்தில் சடலமாக வீழ்கிறான். ஒருவனுடைய உயிர், நீரோட்டம் போன்றது. உயிரற்ற உடலை மண்ணில் புதைப்பதும், நெருப்பில் எரிப்பதும் நிகழ்கிறது. மண்ணில் புதைத்தாலும்,எரித்தாலும் உயிரானது காற்றில் கலந்து, ஆகாயத்துக்குச் சென்றுவிடுகிறது.
உடலை வைத்துத்தான் இந்த உலகத்தில் நமக்கு இருப்பிடம். இதை எல்லோரும் உணர வேண்டும். ஒருவரின் லட்சியங்கள் எவ்வளவு உயர்ந்ததாக வேண்டுமானலும் இருக்கலாம். ஆனால் உடல் நலம் ஒத்துழைக்கவில்லை என்றால், பாதிக்கிணறு தாண்டிய கதைதான். எனவே, உடலைப் பாதுகாத்து, நோயில்லா நெறியை நமக்கு நாமே உருவாக்கிக்கொள்ள வேண்டும்.
சித்தர் பாடல்:
‘கூறுவேன் தேகமது என்னவென்றால்
குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி
மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு
வன்மையுடன் நரம்பினால் வலித்துக் கட்டி
தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி
தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி
ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி
அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே’
மனித உடலில் ரகசியத்தைச் சொல்லும் இந்த எட்டு வரி பாடலில் மனிதனுடைய உடலைப் பற்றிய சித்தர்களின் நுண்ணறிவு துல்லியமாக மதிப்பீடு செய்யப்பட்டிருக்கிறது.
உடல் என்பது, எலும்புகளை கை கால்களைப் போட்டு நீட்டி வைத்து, அவற்றின் ’இருப்பிடம்’ மாறிவிடாமல் இருக்க நுண்ணிய துவரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக் கட்டி, தோலால் மூடி, அவற்றுக்கு இடையே தசைகளைச் சேர்த்து, ரத்தத்தை ஊற்றி, உள்ளே வாயு எனப்படும் பிராணனை உள்ளடக்கி, உடல் என்ற ஓர் உருவம் உருவாக்கப்பட்டிருப்பதாக மேற்கண்ட சித்தர் பாடல் நமக்கு விவரிக்கிறது.
மேலே உள்ள சித்தர் பாடலில் சில வார்த்தைகள் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன. அவற்றுக்கான விளக்கம் என்ன என்றால்.
எலும்புதனை – எலும்பு மண்டலம்
நரம்பினால் – நரம்பு மண்டலம்
இரத்தமதை -ரத்த ஓட்ட மண்டலம்
தோலை மூடி -தசை மண்டலம்
வாய்வுதலை – மூச்சு மண்டலம்
அதாவது, இந்த ஐந்து மண்டலங்களால்தான் தேகம் என்ற உடல், கடமையின் பொருட்டு இந்த உலகில் நடமாடுவதாக சித்தர்கள் கூறுகின்றனர். இந்த மண்டலங்கள் ஒவ்வொன்றும் தமது பணியைச் சரிவர செய்துவந்தால்தான், நாம் உயிரோடு இருக்கிறோம் என்பதை நாமே உணர முடியும்.
ஒவ்வொரு மண்டலத்திலும் உள்ள உறுப்புகள் அந்த மண்டலத்தில் உள்ள மற்ற உறுப்புகளோடும்,வேறு மண்டலத்தில் உள்ள மற்ற உறுப்புகளோடும் ஏதாவது ஒரு வகையில் ‘இணைந்திருக்கிறது’. உதாரணத்துக்கு, உடலில் எலும்புகள் உறுதியாகவும், வலுவாகவும் இருந்தால், நரம்புகளும் தன்னளவில் தளர்வில்லாமல் உறுதியாகவும்,வலுவாகவும் இருக்கும்.
நரம்புகளும் எலும்புகளும் உறுதியாக, வலுவாக இருக்கும் பட்சத்தில் ரத்தக் குழாய்களில் ரத்தம் எந்தத் தடையும் இல்லாமல் சுற்றி வரும். முறையான ரத்தச் சுழற்சியினால், இதயம் என்றும் இளமையுடன் தனது சுத்திகரிப்பு பணியைச் செய்யும்.
ரத்தச் சுழற்சியை முறையாக இயக்கும் பெரிய பொறுப்பு தசைகளைச் சார்ந்தது. அந்தத் தசை மண்டலத்துக்கு, எலும்பு, நரம்பு, ரத்த ஓட்ட மண்டலங்கள்தான் ஆதாரம்.
ஆக, இதில் இருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால்,எலும்பு,நரம்பு, ரத்தம்,தசை இவற்றின் நிலைத்த தன்மை,உறுதி,செயல்படும் தன்மை ஆகியவற்றை வைத்தே வாயு எனப்படும் மூச்சு, உயிராக உடலில் நிலைக்கொள்ளும்.
அந்தவகையில், இந்த ஐந்து மண்டலங்களின் அடிப்படையில் உருவான மனித உடலை உலகில் நிலைநிறுத்தும் உன்னத பணியைப் பின்வரும் மண்டலங்கள் கவனிக்கின்றன அவை:
ஜீரண மண்டலம்
சிறுநீரக மண்டலம்
இனப்பெருக்க மண்டலம்
இப்படி, மனிதனுடைய உடலில் இயங்கும் ஒன்பது மண்டலங்களைப் பற்றியும் அவற்றில் ஏற்படக்கூடிய பாதிப்புகளைப் பற்றியும், அவற்றுக்கான சித்த மருந்துகள், அவை தயாரிக்கும் விதம், சாப்பிடும் அளவு எனப் பல விசயங்களை முழுமையாகத் தெரிந்து கொள்ள இருக்கிறோம். இந்தப் பகுதியில், மண்டலங்களைப் பற்றிய தகவல்களை மட்டும் பார்போம்.
எலும்பு மண்டலம்:
நமது உடலை ஒரு கட்டமாக உருவகப்படுத்திப் பாருங்கள்.
எலும்பின் முக்கியமான மூலப்பொருள்(சத்து) கால்சியம் எனப்படும் சுண்ணாம்பு. பழங்கால வீடுகளுக்கு சுண்ணாம்பு எனப்படும் வெந்த கற்களை(இன்றைய சிமெண்டுக்கு மாற்று) பாலில் நீர்த்து, அத்துடன் கடுக்காய், பனை வெல்லம் சேர்த்து குழைத்துக் கட்டடம் எழுப்புவர்.
வேகவைத்த சுண்ணாம்புக் கற்களை பால், இளநீர் சேர்த்து கரைப்பதால், பாலில் உள்ள சுண்ணாம்புச் சத்தும் (CALCIUM),இளநீர் உள்ள சுண்ணாம்புச் சத்து சேர்த்து சுண்ணாம்புக் கற்களுக்கு மேலும் வலுசேர்க்கின்றன. இத்துடன் நின்று விடவில்லை. கடுக்காய் சேர்க்கப்படுகிறது. அந்தக் கடுக்காயில் என்ன இருக்கிறது?.
சுண்ணாம்புச் சத்தை இரும்பைப்போல் இறுத்தும் தன்மை கடுக்காய்க்கு உண்டு. கடுக்காயின் துவர்ப்புத்தன்மை, சுண்னாம்புச் சத்துடன் சேரும்போது கட்டடத்தின் ஆயுள் நீட்டிக்கப்படுகிறது. எல்லாம் சரி, பனை வெல்லம் சேர்ப்பது ஏன்?.
பனை மரத்தின் சீவிய பாளையில் இருந்து கிடைக்கும் பதநீருடன் தக்க அளவில் சுண்ணாம்பு சேர்த்து காய்ச்சிக் கிடைப்பதுதான் பனை வெல்லம். பனை வெல்லத்தில் உள்ள இனிப்புத்தன்மைக்குப் பதநீரும், சுண்ணாம்பும் தான் காரணம். பதநீரின் துவர்ப்பு, சுண்ணாம்பு இரண்டும் பனை வெல்லத்தில் இருப்பதால், இதைக் கடுக்காயுடன் சேர்த்து தூளாக்கி, சுண்ணாம்புடன் கலந்து வீடு அல்லது கட்டடம் கட்டும்போது அது உறுதியாக, பல நூறு ஆண்டுகள் நிலைத்திருக்கும்.
சுண்ணாம்பு (இயற்கைதாது) +பால் (இயற்கை) +இளநீர் (இயற்கை) +கடுக்காய் (இயற்கை) +பனை வெல்லம்(இயற்கை)என, இயற்கை மூலங்களால் உண்டான கட்டடங்களே பல நூறு ஆண்டுகள் உறுதியுடன் இருக்கும் போது, இயற்கை மூலகங்களில் கிடைக்கும் சுண்ணாம்புச் சத்தை நாம் உணவாகவோ, மருந்தாகவோ சாப்பிடும்போது நமது எலும்புகள் பலம் பெற்று, உறுதியாகி, உடல் வலிமையோடு நூறு ஆண்டுகள் வாழ முடியும் இல்லையா?.
இதுதான் சித்த சூத்திரம்.
ஆக, எலும்புகள் உறுதி பெற , இயற்கை மூலகங்களில் சுண்ணாம்புச் சத்து நிறைந்துள்ள மூலிகைகள் மற்றும் உணவுகளைத் தொடந்து சாப்பிட்டு வந்தால் எலும்புகளில் உண்டாகும் கோளாறுகள் மற்றும் குறைபாடுகள் நீங்கும்.
இதுவே சித்தர்களின் தீர்ப்பு.
இந்த அடிப்படையில்தான், உடலுக்கு ஆதாரமான எலும்புகளைப் பலப்படுத்தும் மூலிகை மருந்துகள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
இனி கட்டடத்தின் அடுத்த கட்டம்.
நரம்பு மண்டலம்:
சுண்ணாம்பு சேர்த்து கட்டப்படும் கட்டடம் மேலும் உறுதியுடன் இருக்க, வரம் பாய்ந்த மரங்களைப் பயன்படுத்துவார்கள். இன்றைய காலகட்டத்தில், வீடுகள் கட்டுவதற்கு, செங்கல், சிமெண்ட், இரும்புச் சத்து உள்ள மருந்துகளும் வழங்கப்படுவதைக் கருத்தில்கொள்ளலாம்.
இதில் இருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால், இரும்புச் சத்தின் மூலம் நமது உடல் நரம்புகளை முறுக்கேற்றலாம் என்பதுதான். இதனால்தான், சித்த மருந்துகளில் நரம்பு மண்டலம் சார்ந்த நோய்களுக்கு, இயற்கை மூலகங்களில் இரும்புச் சத்து அதிகம் உள்ள மூலிகைகளை வகைப்படுத்தியும், இரும்பு போன்ற இயற்கைத் தாதுக்களை முறைப்படி பஸ்பமாக செய்தும் வழங்கி வருகிறார்கள்.
வைரம் பாய்ந்த மரக்கட்டைக்கும் இரும்புக்கும் என்ன தொடர்பு?.
சந்தேகம் எழலாம்.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக நிலைத்து நிற்கும் மரங்கள் சில உண்டு. கருங்காலி, கருவேங்கை, தேக்கு பொன்ற மரங்கள் இந்த வகையைச் சேர்ந்தவை. இந்த மரங்களை அவ்வளவு எளிதாக, சாதாரான மரங்களை வெட்டும் கோடாரியால் வெட்ட முடியாது. அந்த அளவுக்கு மரத்தின் அடிப்பாகம்,கிளைகள் எல்லாம் இரும்பைப் போன்று வலுவோடும் உறுதியோடும் இருக்கும்.
அத்தகைய மரக்கட்டைகளை உடைத்து துண்டுகளாக்கி, கஷாயம் செய்து, அதைப் பல மடங்குகளாகச் சுண்டச் செய்து, அந்த மரத்தின் இரும்புத்தன்மையை மருந்தாக மாற்றுவது சித்தர்களின் மரபு. இப்படி மருந்துகளைத் தயார் செய்து சாப்பிட்டால், நமது உடலில் நரம்புகள் இறுகி நன்கு முறுகேறும். எலும்பும், நரம்பும் இறுகிய உடலில் ரத்தக் குழாய்கள் தங்களுடைய பணியைச் செவ்வனே செய்யும்.
இடன் அடிப்படையில்தான்,நரம்புகளைப் பலப்படுத்தும் மருந்துகளும் , உணவுகளும் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
ரத்த ஓட்ட மண்டலம்:
நமது உடலில் ஓடும் ரத்தம்தான் உயிரோட்டமான வாழ்க்கைக்கு அஸ்திவாரம். ஒருவனுடைய உடலில் வளமையான ரத்தம் தேவையான அளவில் சுழன்று கொண்டிருந்தால், அவன் அபார தன்னம்பிக்கை கொண்டவனாகவும், எதற்கும் பயப்படாதவனாகவும் இருப்பான்.
இளமைப் பருவம் என்பது வளரும் பருவங்களில் மிக முக்கியமானது. வளர்ந்து வாலிப வயதை அடையும் போது , நமது உடலில் ரத்தம் மிகவும் வன்மையுடன் இருக்கும். இளமையில் உண்டாகும் அற்புதமான ரத்த ஓட்டத்தினால், மனமகிழ்ச்சி, மனக்களிப்பு, எதிர்பால் ஈர்ப்பு போன்றவை ஏற்படுகின்றன. இதயம், அன்பு, காதல் போன்ற வார்த்தைகளை உச்சரிக்கும் உதடுகளுக்குச் சொந்தமான உடலில் ரத்த ஓட்டம் ஒரு பகுதி கூடுதலாகவே இருக்கும் என்பது மறுக்கமுடியாத உண்மை. ஆக, நமது உடலில் சுறுசுறுப்பை ஏற்படுத்துவது ரத்தம்தான்.
ரத்தம், தன்னம்பிக்கையின் தாரக மந்திரம். நமது உடலை ஒரு கட்டடமாகப் பார்த்தால், சுண்ணாம்பையும், மரக்கட்டைகளையும் இணைக்கப்பயன்பட்ட தண்ணீர்தான் ரத்தம். இதன் அடிப்படையில்தான், இயற்கை மூலகங்களில் ரத்தத்தைப் பெருக்கும் உணவுகள் மற்றும் மருந்துகள் வகைப் படுத்தப்பட்டுள்ளன.
தசை மண்டலம்:
ஒரு கட்டடம் முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்ட பிறகும், அதில் உடனே குடியேறிவிட முடியாது. அதில் சில மேற்பூச்சுகள்,வண்ணங்கள் தீட்டுதல் போன்ற வேலைப்பாடுகளைச் செய்த பிறகுதான் வீட்டுக்குள் குடிபுக முடியும்.
லட்சக்கணக்கில் செலவழித்து வீட்டைக் கட்டி முடித்து, அதில் வெளிப்பூச்சு,உள்பூச்சு போன்றவற்றைச் செய்யவில்லை என்றால், அந்தக் கட்டடத்தில், மழைக்காலத்தில் நீர்க்கழிவு, கட்டடம் செதில், செதிலாக உரிவது, கட்டடத்தில் வெடிப்பு போன்றவை ஏற்படும். மேலும், கட்டடத்தின் ஆயுளும் குறையும்.
இதேபோல்தான், உடலானது என்னதான் எலும்பு ,நரம்பு, ரத்தம், இவற்றால் முக்கியத்துவம் பெற்றாலும், இவற்றுக்கு ஓர் உருவம் கொடுப்பது தோலும், தசைகளும் தான். உடலை ஒழுங்காக இயக்குவது இந்த்த் தசைகள்தான். இதயத்தைச் சீராக இயக்கி,நமகாக வாழ்நாள் முழுவதும் செயலாற்றுவதும் இந்தத் தசைகள் தான்.
பூசப்படாத கட்டடத்தில் உண்டாகும் குறைகளைப்போல்,தசைகளின் செயல்பாடு குறையும்போது, படை, அரிப்பு, சொரி, சிரங்கு, பரு, அரையாப்புக் கட்டிகள்,பித்த வெடிப்பு,குஷ்டம்(LEPROSY),காயங்கள்,புண்கள்,போன்ற குறைகள் உண்டாகும். இதுபோன்ற குறைகளுக்கு நிவாரணம் தரும் மூலிகைகள், உணவுகள் , தசை மண்டலப் பகுதியில் வகைப்படுத்தப்பட்டுள்ளன.
சுவாச மண்டலம்:
இப்படி, எலும்பு,நரம்பு,ரத்தம், தசை இவற்றால் வேயப் பட்ட’வீட்டில்’ தான் சிவனாகிய சீவன் வாயுவாகக் கூடிகொள்வான். உடலில், பிராணன் முறையாகச் சுழன்று வந்தால் மட்டுமே உயிர் நிலைப்படும். பிராணன் அற்ற உடலில் உயிர் இருப்பதிலை. பிராணக் குறைபாட்டுக்கு சுவாச மண்டலக் குறைகளே காரணமாகும். இவையும்,இயற்கை மூலகங்களை மருந்தாக்கிப் பயன் பெறலாம் என்பதும் சுவாச மண்டலப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளன.
இதுவரை, உடலை ஒரு கட்டிடமாக உருவகப்படுத்தி கட்டிடத்துக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பை தெளிவாகப் பார்த்தோம். அடுத்து, முழுமையாகக் கட்டப்பட்ட கட்டிடத்துக்குள் தேவையான வசதிகளைச் செய்துகொண்டு வசிப்பது போல், நாம் நலமோடு இருப்பதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் அடுத்த நான்கு மண்டலங்களின் செயல் பாடுகளை அடுத்து பார்ப்போம்.
மனித உடல் – ஒரு மாயாசால இயந்திரம்
மனித உடல் – நடமாடும் இறைவனின் கோவில்
மனித உடல் - ஆத்மாவுக்கான ரதம்
மனித உடலின் கட்டமைப்பையும், அதன் இயக்கத்தையும் நம் நுண்ணறிவு கொண்டு தீவிரமாகச் சிந்தித்தால் நாம் அதிசயத்து மலைத்துப்போய்விடுவோம். மனித உடலை, இறைவன் குடியிருக்கும் கோயிலாக சித்தர்கள் கருதினர்.
‘நட்ட கல்லைத் தெய்வம் என்று
நாலு புஷ்பம் சாத்தியே
சுர்றிவந்து முணுமுணென்று சொல்லு
மந்திரம் ஏதடா
நாதன் உல்லிருக்கையில்
சுட்ட சட்டி சட்டுவம்
கறிச்சுவை அறியுமோ’
-சிவ்வாக்கியர்
உடலை ஆலயம் என்று சித்தர்கள் சொன்னதற்கு இதைவிடச் சிறந்த உதாரணம் தேவையில்லை.
சுவையாகச் செய்யப்பட்ட உணவின் சுவையைப் பாத்திரம் அறியாததுபோல்,உளிகொண்டு கல்லில் செதுக்கிய சிலையில் கடவுளைக் காண இயலாது. உண்மையான கடவுளாகிய ’நாதன்’ உனக்குள்,உன் உடலில் இருக்கிறார். எனவே, இறைவன் உறைந்துள்ள உன் உடலை நீ பேணிப் பாதுகாத்து வா என்பதே சித்தர்களின் கட்டளை.
எலும்பு,நரம்பு,ரத்தம்,தசை இவற்றால் கட்டப்பட்ட உடம்பு என்ற ஆலயத்தில், ‘ஜீவன்’ என்னும் வாயுவால் உடலை இறைவன் இயக்கிக்கொண்டிருக்கிறான். எனவே, மனிதனின் தேகம் நிலைக்கும் பொருட்டும் காரிய மாற்றும் பொருட்டும் அவனுக்கு உணவு அவசியமாகிறது.
ஜீரண மண்டலம்:
மனித உடலிக்கு உணவில் இருந்துதான் சக்தி கிடைக்கிறது. ஒவ்வொரு மனிதனும் ‘நாக்குக்கு’ அடிமையானவன்தான். அதனால்தான், எதைப்பற்றியும் கவலைப்படாமல் நன்றாக சாப்பிடுகிறோம். அதே நேரத்தில், நம் உணவின் தேவையை நம்மால் அனுமானிக்க இயலாதபோது அந்த உணவாலேயே நமக்கு நோய்கள் ஏற்படுகின்றன.’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சென்று’ பெரியவர்கள் சொன்னதில்தான் எவ்வளவு உண்மை.
உணவால் உடலில் ஏற்படும் மந்தநிலையே அனைத்து நோய்களுக்கும் மூலகாரணமாக அமைகிறது. உடலின் மந்தத்தில் இருந்து வாயுவும், வாயு மிகுதியால் மலச்சிக்கலும், மலச்சிக்கலால் உடலில் பல சிக்கல்களும் உண்டாவதாக சித்தர்கள் சொல்லியிருக்கிறார்கள். இதையே,
‘காணுமே மந்தம் கவளிக்கும் அன்னத்தால்
காணுமே மந்தம் கடுமா மிசம்மீறல்
காணுமே மந்தம் கலந்தமாப் பண்டத்தால்
காணுமே மந்தம் கடுமேதிப் பாலுக்கே’
என்கிறார் திருமூலர். உணவை நன்றாக மென்று வுழுங்க வேண்டும். அரைகுறையாக மென்று வேகமாக விழுங்கினால் மந்தம் உண்டாகும். அதேபோல், மாமிசம் உண்பதும் உடலுக்கு மந்தமாகும். அதையே அதிகம் சாப்பிட்டால் மந்தம் அதிகமாகும். மாவில் செய்த உணவுப் பொருட்களை அதிகமாகச் சாப்பிட்டாலும், எருமைப் பாலை உணவில் அதிகம் சேர்த்தாலும், உடலில் மந்தம் உண்டாகும் என்று திருமூலர் குறிப்பிடுகிறார்.
உணவு என்பது வாழ்வுக்கான ஆதாரம். நம்மில் பலர் உணவினால் வாழ்வின் அச்சாணியையே முறித்துவிடுகின்றனர். உனவைச் சரியான முறையில் தேர்ந்தெடுத்துச் சாப்பிட்டால் நம் ஜீரண உறுப்புகளில் பிரச்சனை ஏதும் உண்டாவதில்லை.
உணவில் காரமும், சாரமும் அதிகமானால் ஜீரண உறுப்புகளில் புண், அமிலச் சுரப்பு, வாயு, மலச்சிக்கல், மலக்குடல்களில் கோளாறு, மூல நோய்கள் போன்றவை உண்டாகும். இதனால், உடலின் கழிவுகளை வெளியேற்றும் உறுப்புகளுக்கு வேளைப்பளு அதிகமாகி, உடல் சமநிலைத் தன்மையை இழந்து நோய்வாய்ப்பட நேர்கிறது.
எனவே நாம் சாப்பிடும் உணவு நம் கட்டுக்குள் இருக்கவேண்டும். அதிகமாக சாப்பிடுவதாலும், தேவையான அளவு சாப்பிடாமல் இருப்பதாலும் நம்மை ஏராளமான நோய்கள் துரத்துகின்றன. இதற்குத் தீர்வாக, மூலிகைகள், மரங்களின் இலைகள் போன்றவற்றை மருந்தாக்கி , நோய்களைத் தீர்க்கும் முறைகளைச் சித்தர்கள் நமக்கு அளித்துள்ளனர்.
அந்த வகையில், உடலை ஆதாரமாக இயங்கச் செய்யும் ஜீரண மண்டலக் குறைபாடுகளுக்கு சித்தர்கள் அருளிய மருந்துகள் தொகுக்கப்பட்டுள்ளன.
சிறுநீரக மண்டலம்:
நமது சிறுநீரகங்கள் மிகவும் மென்மையானவை. தனி மனித நெறிமுறைகளைக் கொண்டே நமது சிறுநீரகங்களின் ஆரோக்கியத் தன்மையை நாம் உணரலாம்.
புகை மற்றும் போதைப் பழக்கம், மாமிச உணவுகளை அதிகமாகச் சாப்பிடுவது போன்றவற்றால் நம் நுட்பமான உணர்வுகள் மேலும் மேலும் மழுங்கடிக்கப்பட்டு, உடலானது தேய்வை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிவிடுகிறது.
தேவையில்லாத கோபம், மன அழுத்தம், மன உளைச்சல், படபடப்பு, பயம் மற்றும் உணவில் அதிகக் காரம் , உப்பு, போன்றவற்றால் நமது உணர்வுப்பூர்வ உறுப்பான சிறுநீரகங்கள் பாதிக்கப்படுகின்றன.
நமது உடலின் ரத்த சுத்திகரிப்பு பணியிலும், உடலின் கழிவுகளை முறையாக வெளியேற்றி உடலை நிலைக்கச் செய்வதிலும் நமது சிறுநீரகங்கள்தான் முன்னணியில் இருக்கின்றன, சிறுநீரக மண்டலம் சார்ந்த நோய்களுக்கு எத்தனையோ மூலிகை மருந்துகள் உள்ளன. அவை சிறுநீரக மண்டலத்தில் தொகுக்கப்பட்டுள்ளன.
நாளமில்லா சுரப்பி மண்டலம்:
ஆண், பெண் இருபாலருக்கும் அந்தந்த வயதுக்கேற்ப உடலில் ஏற்படும் மாற்றங்களுக்கு அதாவது , ஆண்களுக்கு மீசை முளைப்பது, பெண்களுக்கு மார்பகம் வளர்வது போன்றவற்றுக்கு முக்கியக் காரணமாக இருப்பது இந்த நாளமில்லா சுரப்பி மண்டலம்தான். மேலும் ஆணும் பெண்ணும் உறவுகொண்டு மகிழவும் இந்த மண்டலத்தில் உள்ள சுரப்பிகளே காரணம்.
இந்த மண்டலத்தில் உள்ள சுரப்பிகளில் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. மேலும், அவற்றுக்கான மருந்துகள் கிடைப்பதும் மிகவும் அரிது.
அந்த மண்டலத்தில் உள்ள முக்கிய சுரப்பியான கணையம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் சர்க்கரை நோய், இன்று உலகத்தையே பயமுறுத்தி வருகிறது. தவிர, உடல் பருமன் , மாதவிலக்குகோளாறுகள் , தைராய்டு நோய்கள் போன்றவற்றை இம் மண்டலத்தில் ஏற்படும் மிக முக்கியமான நோய்களாகும்.
மேலும், சித்த உடற்கூறு தத்துவத்தில் சொல்லப்பட்டுள்ள ஆறு ஆதார உயிர் மையங்கள்தான், இம் மண்டலத்தில் உள்ள சுரப்பிகளைத் தூண்டிச் செயல்படுத்துவதாகச் சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த வகையில், சுரப்பிகள் அனைத்தையும் தூண்டும் மூலிகை மருந்துகள் நாளமில்லா சுரப்பி மண்டலம் பகுதியில் தொகுக்கப்பட்டுள்ளன.
இனப்பெருக்க மண்டலம்:
இந்த உலகில் பிறந்த ஒவ்வொரு ஆண் மற்றும் பெண்ணின் பிறப்பும், அவர்களுக்குக் குழந்தை பிறந்த பிறகுதான் முழுமை அடைகிறது . சந்ததியைப் பெருக்கும் முக்கியப் பணியைச் செய்யும் இந்த இனப்பெருக்க மண்டலத்தில் ஏற்படும் ஆண் மற்றும் பெண் தொடர்பான அனைத்துப் பிரச்சனைகளும் இனப்பெருக்க மண்டலத்தில் தொகுக்கப் பட்டு, பிரச்சனைகளுகான சித்த மருந்துகளும் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளன.
அன்றாட வாழ்வின் ஒழுக்க நியதிகளைச் சித்தர்கள் வரையறுத்துள்ளனர். நமது தினசரி வாழ்வியல் நெறிமுறைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது ’பதார்த்த குண சிந்தாமணி’ என்ற பழம்பெரும் நூலில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.
திண்னமி ரண்டுள்ளே சிக்கல் டக்காமல்
பெண்ணின்பால் ஒன்றை பெருக்காமல்- உண்ணுங்கால்
நீர்சுருக்கி மோர்பெருக்கி நெய்யுருக்கி உண்பவர்தம்
பேருரைக்கில் போமே பிணி
இது தேரையர் என்ற சித்தர் எழுதிய பாடல். மலம், சிறுநீர் போன்ற உபாதைகளை அடக்காமல், அவ்வப்போது கழித்துவிட வேண்டும். புணர்ச்சியில் மிகுதியாக ஈடுபட்டு உயிர்த்துளி எனப்படும் விந்தை வீணாக்க்க் கூடாது. நீரைக் காய்ச்சியே பருக வேண்டும். தினசரி ஆகாரத்தில் ,நெய்யைச் சேர்த்து, நிறைய மோர் குடிக்க வேண்டும். இப்படிப்பட்ட வாழ்வியல் நெறிமுறைகளோடு வாழ்பவரின் பெயரைச் சொன்னாலே நோய்கள் நீங்கிவிடும் என்பதுதான் மேற்கண்ட பாடலின் கருத்து.
இவை தவிர , மேலும் பல விஷயங்களைச் சித்தர்கள் தங்கள் பாடல்களில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர். ஆணும், பெண்ணும் உடலில் மறைப்புகள் இல்லாத நிலையில், ஆசை,அன்பு,அரவணைப்பு, அதற்குப் பிறகு உடலுறவு என்று நிகழ்ந்தால் அப்படி உருவாகும் கருவானது ,தாய் , தந்தைக்கு உரிய சிறப்பு அம்சங்களுடன் உருவாகும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
‘அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
என்பது சித்தர் மொழி. இந்த உலகில் உள்ளதுதான் நம் உடலிலும் இருக்கிறது.நம்முடைய உடலில் உள்ளதுதான் இந்த உலகிலும் இருக்கிறது என்று அர்த்தம்.
எனவே, உடலுக்கு ஏதாவது கேடு ஏற்பட்டால், உலகில் காணும் தாவர வர்க்கங்களை, ஜீவ வர்க்கங்களை மருந்தாக்கித் தேகம் நிலைக்கச் செய்ய வேண்டும் என்பது சித்தர்களின் வாக்காகும்.
பல கோடி ஆண்டுகளாக இந்த உலகமும், மனித வர்க்கமும் இருந்து வருகின்றன. மனிதன் இறப்பதற்காகப் பிறப்பவன். இடையில் அவன் வாழ்க்கை என்பது சமூகப் பரிணாம வளர்ச்சிக்காக, இறைவன் தந்த படிப்பினை. எனவே, பிறந்த மனிதன், வளர்ந்து, வாழ்ந்து நோய்வாய்ப்பட்டு மடிந்தே ஆக வேண்டும்.
நோயால் இடையில் மடிவதை, அதாவது இலக்கு அடையும் முன் மடிவதை இறைவன் விரும்பமாட்டான். இந்த உலகில் தோன்றியதன் நோக்கத்தைச் சாதிக்கும் பொருட்டு, நம் உடலுக்குச் சக்தி தேவை. அத்தகைய உயிர்ச்சக்தியை சித்தர்கள் அருளிய மூலிகைகள் நமக்கு அளிக்கின்றன.
எனவே, இறைவன் நமக்கு அளித்த அரிய வரம், இந்த உடல், நல்ல பழக்கவழக்கங்களால் இந்த உடலை இந்த உலகில் நிலைநிறுத்தி, காரியமாற்றி, இலக்கை அடைவோம்.
நன்றி :-http://siragu.com/

சர்க்கரை நோயை முற்றிலும் குணப்படுத்தலாம்

சித்தமருத்துவர் - அருண் சின்னையா நிறுவனர்- தமிழர் சித்த உணவியல் இயற்கை மருத்துவ சங்கம்
வணக்கம், நான் தமிழ் சித்த மருத்துவர் அருண் சின்னையா. உங்களோடு சிறகு இணைய இதழில் அளவளாவுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. தமிழர்களுடைய உணவுமுறை, மருத்துவம் எப்படி இருக்கிறது? எந்த வகையில் எல்லாம் முன்பு நல்ல நிலையில் இருந்தது, இன்றைய கால கட்டத்தில் தமிழ்ச் சமூகத்தின் உணவுகள் எப்படி எல்லாம் இன்று மாறிப் போய் விட்டது? தமிழர்கள் இன்று எப்படியெல்லாம் நோய்க்கு அடிமையாகிவிட்டார்கள்? நோய்க்கு அடிமையான காரணத்தினால் எப்படி எல்லாம் நம் உணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு ஒரு நடைப்பிணமாய் நாம் மாற்றப்பட்டிருக்கிறோம்? இதையெல்லாம் சென்ற கட்டுரையில் பார்த்தோம்.
இப்போது நாம் எதைப்பற்றி பேசப் போகிறோம், என்றால் சர்க்கரை வியாதி நோயைப்பற்றியே. சர்க்கரை வியாதியில் உலகத்திலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய நாடு எது? என்றால் அது இந்தியா. இந்தியாவிலேயே சர்க்கரை வியாதியில் முன்னோடியாக இருக்கக் கூடிய மாநிலம் எது? என்றால் நம்புங்கள் அது நம் தமிழ்நாடு தான்.
தமிழ் நாட்டிலேயே முன்னோடியாக இருக்கக் கூடிய ஒரு நகரம் எது என்றால் சென்னை. சக்கரை வியாதிக்கான மிகப் பெரிய வணிகச் சந்தையை தனக்குள்ளே உள்ளடக்கிக் கொண்டு, நடைப்பிணமாய் திரியக் கூடிய தமிழ் சமூகம் இன்று உருவாகி உள்ளது. அதற்கான காரணங்கள் என்ன? அது எப்படியெல்லாம் வருகிறது? அதை எப்படி தடுக்கலாம்? அதற்கான உணவு முறை கட்டுப்பாடுகள் என்ன? இதையெல்லாம் முழுமையாக அலசி ஆராயப்போகிறோம். முதலில் நீரிழிவு என்பது அன்றே சித்தர்களால் மது மேகம் என்ற பெயரில் சொல்லப்பட்டது. இந்த மது மேகம் எப்படியெல்லாம் வரும் என்பதை விளக்கும் சித்தர் பாடலானது . . . .
“கோதையார் களவின் போதை
கொழுத்த மீனிறைச்சி போதை
பாலுடன் நெய்யும்
பரிவுடன் உண்பீராகில்
வருமே பிணி”
என்று மது மேகத்தைப் பற்றி சொல்கிறார்கள் சித்தர்கள். அதாவது கோதையார் களவின் போதை என்று சித்தர்கள் சொல்லக் கூடிய ஒரு பெரிய காரணி என்ன என்றால் உடலுறவில் ஈடுபடும் பொழுது முழுமையாக செயல்படக் கூடியது நாளமில்லாச் சுரப்பி மண்டலம் ஆகும். ஆதலால் மதுமேக நோய் என்பது ஒரு ஹார்மோனல் கிருமி என்கிறார்கள். உடலில் இன்சுலின் என்கிற ஹார்மோன் குறைவதால் வரக் கூடிய நோய் இதுவாகும்.
சித்தர்கள் அன்றே தெளிவாக கூறியிருக்கிறார்கள் “கோதையார் களவின் போதை, கொழுத்த மீனிறைச்சி போதை” என்றால் நிறைய அசைவ உணவுகள், மந்த உணவுகள் எடுத்துக் கொண்டால் இந்த உணவின் மூலம் பாலியல் சார்ந்த உணர்வுகள் தூண்டப்பட்டு அதன் அடிப்படையில் அடிக்கடி பாலியல் சார்ந்த உறவுகளில் ஈடுபடும் பொழுது மது மேகம் என்ற நோய்க்கு மனிதர்கள் ஆட்படுகிறார்கள் என்று சித்தர்கள் கூறுகிறார்கள்.
அதே போல் “பாலுடன் நெய்யும், பரிவுடன் உண்பீராகில்” என்பது பாலாக இருந்தாலும் சரி, நெய்யாக இருந்தாலும் சரி அதை அரிசியோடு சேர்த்து எடுக்கும் கால கட்டத்தில் நீரிழிவு கண்டிப்பாக வரும் என்பது சித்தர்களின் கூற்று. இந்த மதுமேகந்தான் இன்று உலகையே அச்சுறுத்தக் கூடிய நீரிழிவு என்னும் நோயாகும்.. இந்த நீரிழிவு நோய் என்பது இன்று அனைவருக்கும் பொதுவாகிவிட்டது. நீரிழிவில் மூன்று வகையான நீரிழிவுகளைப் பார்க்கிறோம். குழந்தைகளுக்கு வரக்கூடியது (Juvenile) நீரிழிவு என்று சொல்கிறார்கள் இது முதல் விதம். இரண்டாவது மருந்துகளால் கட்டுப்படக் கூடிய நீரிழிவாகும்.
மருந்தே இல்லாமல் இன்சுலினுக்கு கட்டுப்படக்கூடிய நீரிழிவு. இது மூன்றாவது விதம். என்று மூன்று விதமான நீரிழிவு இருக்கிறது. சர்க்கரை நோய் ஒருவருக்கு வந்து விட்டது என்றால் அவருடைய முழுமையான செயல்பாடுகள் சிறிது சிறிதாக குறைய ஆரம்பித்து விடும். உடல் மெலிந்து விடும், அடிக்கடி சிறுநீர் கழிக்கக் கூடிய தன்மை இந்த மாதிரி அதன் அறிகுறிகளை கொடுமையாக வெளிப்படுத்தக் கூடிய ஒரு கால கட்டம் உண்டு.
இன்று தமிழ் நாட்டில் தமிழ்ச் சமூகம் சந்திக்கக் கூடிய ஒரு பெரிய பிரச்சினை என்ன என்றால் நீரிழிவு நோய், இது ஒரு குறைபாடு தான். இக்குறைபாட்டிலிருந்து நாம் மீள முடியும் என்கிற தன்னம்பிக்கையை இழந்து விட்டு எப்பொழுதும் மருந்துகளையும், மருத்துவர்களையும் தேடி அவர்கள் பின்னாலேயே ஓடக் கூடிய ஒரு நிலையில் தான் தமிழ் மக்கள் இன்று இருக்கிறார்கள். அதற்கான காரணம் என்ன என்று பார்த்தால், எவ்வளவோ உணவுப் பொருட்கள் சொல்லப்பட்டிருந்தாலும் நமக்கு அந்த பாரம்பரியமான உணவுப் பொருட்கள் இந்நோயை கட்டுப்படுத்தக் கூடிய தன்மையில் இருந்தாலும் கூட அந்த உணவுகளை நாம் எடுக்கத் தயாராக இன்று இல்லை.
ஏன் என்றால் நாம் அந்த அளவுக்கு அரிசியை பழக்கப்படுத்தி வைத்திருக்கிறோம். அரிசியிலிருந்து கிடைக்கக் கூடிய Carbohydrates என்ற மாவுச்சத்து மிகவும் அதிகமாக இருகிறது. இந்த அரிசியையே தொடர்ந்து 2 வேளை அல்லது 3 வேளையாகச் சாப்பிடக் கூடிய மக்களுக்கு என்ன ஆகும்? நீரிழிவு தொடர்ந்து உடலிலேயே இருக்க ஆரம்பிக்கிறது. நீரிழிவைக் கட்டுப்படுத்த வேண்டும் என்றால் கண்டிப்பாக அது உணவுகளால் தான் சாத்தியமாகும். இந்த அவசர கால யுகத்தில், உணவுப் பொருட்களில் நிறைய உடனடி உணவுகளைப் (Instant food) பயன்படுத்துகிறோம்.
என்னுடைய நீரிழிவுக்கான மருத்துவ சிகிச்சையின் போது நான் பலரையும் பார்த்திருக்கிறேன், காலை வேளையில் 2 பிரட்டையும், ஒரு கோக், பெப்சி, மிராண்டா போன்ற குளிர் பானத்தை குடிப்பவர்களுக்கு, ஒரு மாதமோ, இரண்டு மாதமோ அல்லது ஆறு மாதமோ இதையே பழக்கப்படுத்திவர்களுக்கெல்லாம் நீரிழிவு வந்திருக்கிறது. எனவே உணவில் நிறைய துரித உணவுகள், ரசாயன உணவுகள் எடுக்கக் கூடியவர்களுக்கு கண்டிப்பாக நீரிழிவு வருகிறது.
இதை எப்படி தடுக்கலாம், என்றால் மருந்து ஓரளவிற்கு கட்டுப்படுத்தத்தான் செய்யும், ஆனால் முழுமையாக குணப்படுத்திவிடாது. ஆனால் உணவுகளை அடையாளப்படுத்தி, தேர்ந்தெடுத்து சாப்பிடும் பொழுது சர்க்கரை நோயை முழுமையாக நாம் குணப்படுத்த முடியும். அன்றைய சித்தர்கள் சொன்ன மதுமேகந்தான் இன்று உலகையே ஆட்டிப் படைக்கக் கூடிய சர்க்கரை வியாதி.
இந்த சர்க்கரை நோய்க்கான காரணம் என்ன என்றால் அடித்துச் சொல்லலாம் உணவு முறைகளின் முரண்பாடுதான். இது பாரம்பரிய நோய், இது அம்மா அப்பாவுக்கு இருந்தால் நமக்கும் வரும் என்பது உண்மையாக இருந்தாலும் கூட அதைக் கண்டிப்பாகத் தடுக்க முடியும். எனவே அதற்கான உணவுகள் என்னென்ன? அதை எப்படியெல்லாம் நாம் பயன்படுத்தலாம் என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.
சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த . . .
வெந்தயம்:
சர்க்கரை நோயை பிரதானமாக கட்டுப்படுத்தக் கூடிய தன்மை வெந்தயத்திற்கு உண்டு. வெந்தயத்தைப் பிரித்தால் வெந்த + அயம். வெந்த என்றால் பஸ்பமாகி விட்டது என்று அர்த்தம். அயம் என்றால் இரும்பு என்று பொருள். இரும்பை பஸ்பமாக்கக்கூடிய ஒரு பொருள் எது என்றால், அது வெந்தயம் தான். தொடர்ந்து வெந்தயத்தை வறுத்து வைத்துக் கொண்டு, தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வந்தால் கூட நீரிழிவு நோய் முழுமையாகக் கட்டுப்படுத்தலாம்.
பாகற்காய்:
அடுத்து பாகற்காய். பாகற்காயை நன்கு காயவைத்துப் பொடி செய்து காலை, இரவு என்று இரண்டு வேளை தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு கண்டிப்பாகச் சர்க்கரை நோய் முழுமையாகக் குறையும். சர்க்கரை நோய் என்பது தனி நோய் கிடையாது. இது பல நோய்களுடைய சார்பு நோய் ஆகும்.
அதாவது முதலில் நீ செல் பின்னாடியே நான் வருகிறேன் என்று சொல்வது மாதிரி ஒருவருக்கு சர்க்கரை நோய் வர ஆரம்பித்தது என்றால் தொடர்ந்து ரத்த அழுத்தம் வரலாம், கொழுப்பு நோய் ,கொழுப்பு சீரற்ற நிலையில் மாறலாம். ரத்தத்தில் Try Glyceride என்கின்ற கொழுப்பு இருக்கிறது.
அதே மாதிரி LDL என்று சொல்லக் கூடிய கெட்ட கொழுப்பும் இருக்கிறது. இந்த இரண்டும் அதிகமாக மாறும் பொழுது இதயம் சார்ந்த நோயும் வரலாம். சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு இதயம் சார்ந்த நோய் வருவதற்கு வாய்ப்பு அதிகம் உண்டு. சர்க்கரை அதிகமாகி கட்டுப்படாத சூழலினால் சிறுநீரகப் பாதிப்பு சார்ந்த நோயும் வரலாம். இதனால் சிறுநீரக செயலிழப்பு கூட உண்டாகலாம்.
நினைவுத்திறன் குறைந்து போவது, மூளைத்திறன் குறைந்து போவது இப்படி பல நோய்களைக் கொண்டுவரக் கூடிய நோயாக சர்க்கரை நோய் உள்ளது. நீரிழிவு என்றால் உடலை நீராய் இழக்கச் செய்யக் கூடிய ஒரு வியாதி நீரிழிவாகும். நம் உடம்பில் இருக்கக் கூடிய அனைத்து ஆதாரங்களையும் சிறிது சிறிதாக வெளியே கொண்டு வந்து விடும். அதாவது எலும்பு நம் உடம்பிற்கு வன்மை தரக்கூடியதாக இருந்தால் கூட, அந்த எலும்பையே கரைக்கக் கூடிய தன்மை இந்த நீரிழிவுக்கு உண்டு.
ஆதலால் நீரிழிவை நாம் உண்ணும் உணவின் மூலம் கட்டுப்படுத்த வேண்டும். நீரிழிவு நம் உடம்பை மென்மையாக்குகிறது. அப்பொழுது நன்றாக உண்ணக்கூடிய உணவுப் பொருட்களைச் சாப்பிட வேண்டும். நன்றாகப் புரிந்து கொள்ளுங்கள், எந்த உணவுப் பொருட்களில் துவர்ப்பு சக்தி அதிகமாக இருக்கிறதோ அவைகள் நீரிழிவை கட்டுப்படுத்தும்.
வாழைப்பூ:
நீரிழிவு நோயாளி ஒருவர் வாழைப்பூவை கசாயம் செய்து சாப்பிட்டார் என்றால் கண்டிப்பாக நீரிழிவு கட்டுப்படும். ஆனால் வாழைப்பூவில் கடலைப்பருப்பைச் சேர்த்து இன்று நாம் பருப்பு வடையாகத்தான் சாப்பிடுகிறோம். இதே வாழைப்பூவுடன், சிறிது காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து அரைத்து துவையல் மாதிரி செய்து தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படும்.
தென்னைமரப் பூ:
அதே மாதிரி தென்னம்பாலைக்குள் இருக்கும் தென்னை மரத்துப் பூவை நன்றாகக் காயவைத்து, அதைப் பொடி செய்து காலையிலும், இரவிலும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தோம் என்றால் சர்க்கரை நோய் கட்டுப்படுவதுடன் சர்க்கரை நோயால் தளர்ந்து போன நரம்புகள் அனைத்தும் சரியாகிவிடும். இதனால் நம் கண் பார்வையும் தெளிவாக இருக்கும்.
நீரிழிவால் நரம்பு பாதிக்கப்படுவதால் கண்ணில் வரக்கூடிய நோய்கள் நிறைய வரும். அதே போல் நம் பாதங்களிலும் பல நோய் வரும். இவை அனைத்தையும் சரி செய்யக் கூடிய தன்மை தென்னம்பாலைக்குள் உள்ள தென்னைமரத்துப் பூவுக்கு உண்டு.
நெல்லி, கடுக்காய், தான்றிக்காய் :
அது போல் நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் இதையும் சம அளவில் கலந்து வைத்துத் தொடர்ந்து திரிபலா என்கிற சூரணத்தையும் சாப்பிடும் பொழுது நீரிழிவு முழுமையாகக் கட்டுப்படக்கூடிய ஒரு வாய்ப்பு உண்டு. அதே போல் இந்த சர்க்கரை நோய்க்கு என்ன செய்யலாம் என்றால், சமையலில் சீரகத்திற்குப் பதிலாக அல்லது சீரகத்துடன் கருஞ்சீரகத்தையும் சேர்த்து சமையலில் ஈடுபடுத்தும் பொழுது சர்க்கரைக்கு அற்புதமான ஒரு மருந்தாக இருக்கும்.
அதே போல் ரத்தத்தில் கெட்ட கொழுப்பு ( Try Glyceride) அதாவது இதயத்திற்கு செல்லக் கூடிய ரத்த நாளங்களில் அடிக்கக் கூடிய ஒரு கொழுப்பு ட்ரை க்லீசரைடு. உலகம் முழுக்க அதற்கான மருந்துகள் குறைவு. அந்த மருந்துகளை உபயோகப்படுத்தினால் அதற்கான பக்கவிளைவுகள் அதிகம். இதை முழுமையாக சரி செய்ய நம் நாட்டு கருவேப்பிலை, லவங்கப் பட்டை, வெந்தயம் இந்த மூன்றையும் சம அளவில் கலந்து வைத்துக் கொண்டு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண்டிப்பாக அற்புதமான பலன் கிடைக்கும்.
அன்றைய மது மேகத்தில் சித்தர்கள் சொன்ன உணவுகள் எல்லாம் இதுதான். சித்தர்களுடைய விஞ்ஞான பார்வைக்கு ஒரு எடுத்துக்காட்டு சொல்லாம். அதாவது அன்றைய காலத்தில் மதுமேகம் வந்த நோயாளிகளுக்கு சித்தர்கள் கொடுத்த மருந்து பருத்தி கொட்டை, எள்ளுப் புண்ணாக்கு, கோரைக் கிழங்கு, ஆவாரம்பூ போன்றவைகளையே மருந்தாகக் கொடுத்தனர். என்ன இது எருமை மாடு சாப்பிடுவதை மருந்து எனச்சொல்கிறாரே என்று நினைத்தால் அது தவறு.
இந்த உலகத்தில் நீரிழிவு என்ற நோய் பரவத்தொடங்கிய போது இன்சுலின் குறைபாடு உள்ளவர்களுக்கு மாத்திரையால் ஒரு சிலருக்கு சர்க்கரை நோய் கட்டுப்படுத்தப்பட்டது. ஆனால் இன்னும் ஒரு சிலருக்கு மாத்திரை பலன் கொடுக்க வில்லை. அப்போது என்ன செய்தார்கள் என்றால் பன்றிகளுடைய கணையம், எருமை மாட்டுடைய கணையம் இந்த இரண்டு கணையத்திலிருந்து இன்சுலின் நுண்ணுயிர் எடுக்கப்பட்டு அது மனிதருக்கு ஏற்புடைய வகையில் இன்சுலினாக மாற்றப்பட்டு அதன் பிறகு, அதை மனிதர்களுக்கு மருந்தாகச் செலுத்தினார்கள்.
இப்பொழுது DNA கூட்டமைப்பு உள்ள human Insulin இன்று உலகம் முழுக்க வந்துவிட்டது. ஆனால் அதற்கு முன்பு கோரைக் கிழங்கையே பிரதானமாகச் சாப்பிடக் கூடிய பன்றிகளின் கணையத்திலிருந்து இன்சுலின் எடுக்கப்பட்டது, பருத்திக் கொட்டையையும், எள்ளுப் புண்ணாக்கையும் சாப்பிட்ட எருமை மாட்டுக் கணையத்திலிருந்து இன்சுலின் எடுக்கப்பட்டது. இதில் ஒரு ஆச்சர்யம் என்றால் சித்தர்களுக்கு எவ்வாறு இது தெரிந்தது என்று தெரியவில்லை. ஏன் என்றால் பிரதானமாக பருத்திக் கொட்டையிலேயும், கோரைக் கிழங்கிலேயும், எள்ளுப் புண்ணாக்கிலேயும் இன்சுலின் அளவு அப்படியே இருக்கிறது. அதில் உள்ள கந்தகச் சத்து அப்படியே வரும். நம் உடம்பில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்- ஐ முழுமையாகக் கரைக்கக் கூடிய தன்மை இதற்கு உண்டு.
அதனால் தான் இன்றும் எனது கிராமத்தில் சர்க்கரை நோய் என்று கூறினால் யாரும் தொடர்ந்து மாத்திரை சாப்பிடுபவர்களை பார்க்கவே முடியாது. மிக எளிமையாக அரைக் கிலோ எள்ளு புண்ணாக்கு, அரை கிலோ பருத்திக் கொட்டை, அரை கிலோ ஆவாரம்பூ , 100 கிராம் கருஞ்சீரகம் இவற்றை உரலில் இட்டு இடித்து வைத்துக் கொள்கிறார்கள். இதில் ஒரு கையளவு எடுத்து சிறிது கருப்பட்டி, பனைவெல்லம் சேர்த்து இக்கலவையை நன்கு கொதிக்க வைத்து, அதை நன்றாக வடிகட்டி காலையிலேயும், இரவிலேயும் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் தானாகவே சரியாகிவிடும்.
சர்க்கரை நோய் வந்தவர்கள் எந்த மருந்தை எடுத்தும் கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். அதற்குத் தகுந்த மாதிரி உடலில் வியர்வை உண்டாக்க வேண்டும். அதுதான் பிரதானமானது. நாம் சிறிது நடைப்பயிற்சி கூட செய்யாமல் இருப்பதனால் சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த முடியாது. ஒரு இலகுவான நடைப்பயிற்சி, உடலை வருத்திச் செய்யக் கூடிய சில வேலை இவற்றையெல்லாம் செய்து வியர்வையை உண்டாக்கிக் கொள்ளவேண்டும். குறைந்தது 50 மில்லி அளவாவது சர்க்கரை நோயாளிகளுக்கு வியர்வை வர வேண்டும்.
இதில் இன்னும் பெரிய விசயம் என்னவென்றால் நீரிழிவால் வரக்கூடிய கால் புண்ணானது குழிப் புண்ணாக மாறிவிடும். அந்தப் புண்ணுக்கு ஆங்கில மருத்துவத்தில் டின்ஜர், டெட்டால், மற்றும் சில மருந்துகளையும் சேர்த்து குணப்படுத்துகிறோம் பேர்வழி என்று சொல்லி, பிறகு காலையே வெட்டக் கூடிய ஒரு நிலை வருகிறது. கிராமங்களில் வெறும் ஆவார இலையை அவித்து அந்த புண்ணில் வைத்து கட்டுகிறார்கள். அதன் பின் ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் அப்புண் குணமாகி விடுகிறது அவ்வளவு அதிசயமான விசயம் எல்லாம் சித்தர்கள் கூறியிருக்கிறார்கள்.
சர்க்கரை நோயில் ஆவாரம்பூவிற்கு ஒரு பிரதானமான இடம் இருக்கிறது. அதில் தங்கத்தின் சத்து இருப்பதாக சித்தர்கள் கூறுகிறார்கள். ஆனால் இன்றைய விஞ்ஞானம் இப்பூவை ஆராய்ச்சி செய்து பார்க்கும் பொழுது அதில் தங்கத்தின் கூறுகள் இருப்பதை ஒத்துக் கொள்கிறது. ஆவாரம்பூ இந்நோய்க்கு அவ்வளவு அற்புதமானது. அதனால் சித்தர்கள் கூறுவார்கள் “ஆவாரை பூத்திருக்கச் சாவாரைக் கண்டதுண்டோ” என்று. இந்த ஆவாரையைத் தொடர்ந்து சாப்பிடக் கூடியவர்களுக்கு சாவே இல்லை என்று கூறுகிறார்கள். சர்க்கரை நோயில் அது முழுக்க முழுக்க உண்மை.
இன்று சர்க்கரை நோய்க்கு இனிப்புத் துளசி சாப்பிடுபவர்கள் நிறைய நபர்களை பார்த்திருக்கிறோம். ஆனால் ஆவாரம் பூவை தேநீராகச் சாப்பிடும் பொழுது சர்க்கரை நோய் கட்டுப்படுவதை நாங்கள் கண் கூடாக காண்கிறோம். சத்தாகச் சாப்பிடுங்கள் சர்க்கரையைக் கட்டுபடுத்துங்கள் என்று நாங்கள் கூறுகிறோம். உணவை கட்டுப்படுத்தும் பொழுது அந்த உணவின் ஊட்டமேல்லாம் குறைய ஆரம்பிக்கிறது. ஆக தேர்ந்தெடுத்த உணவை நாம் எடுக்கும் பொழுது நல்ல முழுமையான பலன் கண்டிப்பாக கிடைக்கும்.
ஆவாரம்பூ, சுக்கு, ஏலக்காய் இவற்றை தொடர்ந்து கொதிக்கவைத்து கசாயமாகச் சாப்பிடும்பொழுது சர்க்கரை நோய் முழுமையாக கட்டுப்படும்.இது மிக எளிமையான வழிமுறைஆகும். தேநீர் சாப்பிடக் கூடிய அதே சுவை இதிலேயும் இருக்கும். ஆவாரம்பூ தேநீர் சாப்பிட்டுப் பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும். இன்னும் சர்க்கரை நோய்க்கு சிறுகுருஞ்சான், நாவல் கொட்டை, மருதம்பட்டை, வேப்பம்பட்டை, கடலலஞ்சில் இவை ஐந்தையும் சம அளவு கலந்து, பொடி செய்து வைத்துகொண்டு காலை, இரவு நேரம் தொடர்ந்து சாப்ப்பிட்டுக் கொண்டு வந்தால் சர்க்கரை நோய்க்கு நல்ல பலன் இருக்கும்.
நீரிழிவு என்றால் உடம்பை மென்மைப் படுத்தக் கூடிய ஒரு வியாதி ஆகும், அந்த நீரிழிவைக் கட்டுப்படுத்தவேண்டும். அப்பொழுதுதான் உடம்பு நல்ல சக்தி பெரும். நீரிழிவு நோயாளிகள் உடம்பில் அதிகம் நீர்ச்சத்து இழக்காமல், தண்ணீர் தாகம் அதிகம் இல்லாமல், நாவு வறட்சி இல்லாமல் இருக்க கவனம் செலுத்த வேண்டும். நாம் மேலே கூறிய உணவுகளை எல்லாம் தொடர்ந்து எடுத்துக்கொள்ளும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
நாம் உணவில் நிறைய பிஞ்சுக் காய்கறிகளான முருங்கைப் பிஞ்சு, பீர்க்காய்ப் பிஞ்சு , புடலங்காய்ப் பிஞ்சு, பீன்ஸ், அவரை இவை அனைத்தையும் தொடர்ந்து சாப்பிட்டுக் கொண்டே வாருங்கள். இன்று இருக்கும் அலோபதி மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளிடம் கேரட் சாப்பிடாதீர்கள், அது சர்க்கரை நோய்க்கு நல்லதில்லை என்று கூறி வருகிறார்கள். அவர்கள் அப்படிச் சொன்னதனால் 10 வருடமோ அல்லது 15 வருடமோ கேரட்டையே சாப்பிடாத சக்கரை நோயாளிகள் எனக்கு தெரிந்து நிறைய பேர் இருக்கிறார்கள். கேரட் கண்களுக்கு மிகவும் நல்லது.
இதில் பீட்டா கரோடினாய்ஸ் எனும் ஊட்டச் சத்து இருப்பதனால் நம் தோல் பகுதிக்கு கீழ் இருக்கக் கூடிய தசை பகுதியில் சக்தியை சேர்த்து வைக்கக் கூடிய தன்மை கேரட்டிற்கு உண்டு. அதனால் தாராளமாக நீரிழிவு நோயாளிகள் கேரட்டைச் சாப்பிடலாம் தவறில்லை.
அது போல் தமிழ் நாட்டில் இருக்கக் கூடிய ஆங்கில மருத்துவர்கள் சர்க்கரை நோயாளிகளை பார்த்து இளநீர் சாப்பிடாதீர்கள் என்று கூறி திசை திருப்புகிறார்கள். இளநீர் சாப்பிட்டால் கண்டிப்பாக நீரிழிவு அதிகமாகிவிடும் என்று கூறி நோயாளிகளைப் பயமுறுத்துகிறார்கள். இது தவறான செயலாகும். நான் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன், கரும்புச் சாற்றிலிருந்து சர்க்கரை தயார் செய்யலாம், இளநீரிலிருந்து சர்க்கரை தயார் பண்ண முடியுமா? இதை யோசித்து பாருங்கள். இளநீரில் அத்தனை கால்சியமும் இருக்கிறது. அச்சத்தில் புண்களை ஆற்றக் கூடிய தன்மை இருக்கிறது. ஒரு தட்டுச் சாப்பாட்டில் இருக்கக் கூடிய கார்போ ஹைட்ரேட்ஸ் இளநீரில்கிடையாது.
அதனால் என்னைப் பார்க்க வரும் நோயாளிகளுக்கு நான் கூறுவது, இளநீரில் வெந்தயத்தை ஊற வைத்து, அந்த வெந்தயத்தையும் இளநீரையும் நன்கு கலந்து சாப்பிடுங்கள் என்கிறேன். அப்படிச் சாப்பிட்டால் சர்க்கரை முழுமையாகக் கட்டுப்படக் கூடிய வாய்ப்பு உள்ளது. அதே மாதிரி மருதம்பட்டையைக் கசாயம் செய்து தொடர்ந்து சாப்பிடும் பொழுது நல்ல பலன் கிடைக்கும்.
நாம் உண்ணும் உணவில் பல்வேறு உணவுகளைப் பன்னாட்டு நிறுவனங்கள் திணிக்கத் தயாராகி கிட்டத்தட்ட 17 வகையான நூடுல்ஸ்சில் அதிக பொட்டாசியம் சத்து , அதிக சோடியம் சத்து ஆகியவை அதிகமாக இருக்கிறது கூவிக் கூவி விற்பனை செய்து நம்மை வாங்க வைக்கிறது. இதை இந்திய விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, இந்த பன்னாட்டு உணவுகள் உண்பதற்கு ஏற்ற உணவுகள் அல்ல, இவைகள் பக்க விளைவுகளை ஏற்படுத்தும் ஆதாலால் இதைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்று சொன்னால் கூட, இவைகளை நிறுத்துவதற்கு எந்த அரசும் தயாராக இல்லை. ஏன் என்றால் பன்னாட்டு நிறுவனங்கள் கொடுக்கக் கூடிய மிகைமிஞ்சிய வரியே இதற்குக் காரணம் ஆகும்.
இந்தத் தொகை பெரிய தொகையாக ஆளுகின்றவர்களுக்கு தெரிவதால் மக்களுடைய அடிப்படை ஆரோக்கியத்தைப் பற்றி எந்தக் கவலையும் இல்லாத ஒரு சூழல் இருக்கிறது. ஆக ஒவ்வொரு தனி மனிதனும் தனக்கான விழிப்புணர்வை அவன்தான் தேடி எடுத்துக் கொள்ள வேண்டும். ஆரோக்கியமான வாழ்விற்கு உணவுக் கட்டுப்பாடு என்பது கண்டிப்பாக வேண்டும். உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டிய விசயமும் நம் கையில் தான் இருக்கிறது.
சித்தர்கள் சொன்ன சிறு தானியங்கள் வரகரிசி, திணை அரிசி, குதுரவாலி, சாமை எல்லாமே நார்ச்சத்து உள்ள அற்புதமான உணவுகள். இந்த உணவுகளை ஒரு வேளையோ, இரு வேளையோ சர்க்கரை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிடும் பொழுது நோய் கட்டுப்படக் கூடிய ஒரு தன்மை உண்டு. சர்க்கரை நோய் வந்து விட்டாலே உடலில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, சுண்ணச்சத்து இவைகள் குறைந்து விடும். இவற்றை ஈடுகட்ட துவர்ப்பான உணவுகளை எடுத்துக் கொண்டால் சர்க்கரையை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும்.
இந்தியாவானது இன்று உலகத் தாயாரிப்புகளை விற்கும் பெரும் வணிகச் சந்தையாக, வளர்ந்த நாடுகளுக்கென மாறிவிட்டது. அதனால் தான் இங்கு நோய் மறைமுகமாக விதைக்கப்படுகிறது. அந்த நோய்களை இங்கு விதைத்து, மறைமுகமாக இங்குள்ள நிதி ஆதாரங்கள் கொள்ளயடிக்கப்படுகிறது. எனவே நாம் தான் நுகர்ர்வுப் பொருட்களை வாங்கும் பொது மிகக்கவனமாக இருக்க வேண்டும்.
2007 கணக்குப்படி இந்தியாவில் சர்க்கரை வியாதிக்கான வணிக மதிப்பு 700 கோடி. அமெரிக்காவின் எலிலில்லி என்ற நிறுவனம் தயாரிக்கின்ற மருந்துகள் இங்கு மட்டும் 700 கோடி ரூபாய்க்கு விற்பனையாகக் கூடிய வணிகச் சந்தையாக நம் நாடு இருக்கிறது.. இது இன்று கிட்டத்தட்ட 1000 கோடியைத் தாண்டி சென்றிருக்கும். அதனால் நம்முடைய நிதி ஆதாரங்கள் கொள்ளயடிக்கப்படாமல், நம்முடைய நாடு வளமையான நாடாக மாற வேண்டும் என்றால்,நாம் நல்ல உடல் நலத்தோடு, உடல் வளத்தோடு இருக்க வேண்டும்.
அவ்வாறு மாறும் பொழுதுதான் ஒரு முழுமையான, ஒரு ஆரோக்கியமான இந்தியாவை, ஒரு ஆரோக்கியமான தமிழ்ச் சமூகத்தை நாம் படைக்க முடியும். எப்பவுமே நோய்வாய்ப்பட்டவனிடம் படைப்பாற்றல் குறைந்து விடும். ஒரு நல்ல ஆற்றல் உள்ள, படைப்புத்திறன் உள்ள தமிழ் சமூகம் மறுபடியும் வரவேண்டும், வளரவேண்டும் என்றால் சர்க்கரையை கட்டுப்படுத்த வேண்டும்.
அவ்வாறு கட்டுப்படுத்துவதற்கு உணவே மருந்து மருந்தே உணவு என்ற சித்தர்கள் கோட்பாட்டின் படி அனைவரும் முயற்சி செய்யவேண்டும். நான் கூறிய உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள், உணவே அடிப்படையாகக் கொண்ட மருந்துப் பொருட்கள் எல்லாவற்றையுமே தொடர்ந்து சாப்பிடுங்கள். அடுத்த முறை சிறகு இணைய இதழில் சர்க்கரை நோயினால் வரக் கூடிய சார்பு நோய்கள் பற்றி விரிவாக எடுத்தியம்ப இருக்கிறேன்.
சர்க்கரை நோய் வந்தவர்களுக்கு ஆஸ்துமா, இதய நோய், சிறுநீரக நோய் ஆகிய நோய்களும் துணை நோய்களாக இருக்கிறது. அதனால் இந்த சார்பு நோயைப் பற்றி இன்னும் விளாவரியாக அடுத்த கட்டுரையில் பார்ப்போம்
நன்றி :-.http://siragu.com/

Thursday, September 11, 2014

வள்ளலார் அருளிய காயகல்பம்....

வள்ளலார் அருளிய காயகல்பம்
காயகல்பம் என்பது நோயற்ற வாழ்வு வாழ சித்தர்கள் நமக்கு அளித்த மருந்துகளாகும். சாதாரணமாக காயகல்பம் தயார் செய்ய மிகுந்த செலவாகும். ஆனால் வள்ளலார் மிகக்குறைந்த செலவில் மனித குலம் வாழ காயகல்பம் அருளியுள்ளார்.
வெள்ளை கரிசலாங்கண்ணி 200 கிராம், தூதுவளை 50 கிராம், முசுமுசுக்கை 50 கிராம், சீரகம் 50 கிராம் ஆகியவற்றை பொடியாக காதி கிராப்டில் வாங்கி (சீரகம் மட்டும் தனியாக வாங்கி பொடித்துக் கொள்ளவும்).
இந்த பொடிகளையெல்லாம் ஒன்றாகக் கலந்து கொள்ளவும்.
தினமும் காலையில் பல் துலக்கியவுடன் ஒரு தம்ளர் பாலில் மேற்கண்ட பொடியை ஒரு டேபிள் ஸ்பூன் கலந்து ஐந்து நிமிடங்கள் கொதிக்க வைத்து சர்க்கரை கலந்து லேசான சூட்டில் சிறிது சிறிதாக சுவைத்து சாப்பிட வேண்டும்.
இந்த மருந்து சர்வரோக நிவாரணியாகும். இதனைத் தொடர்ந்து வருடக் கணக்கில் சாப்பிட்டு வர மனிதவுடலை வாட்டும் அனைத்து நோய்களும் குணமாகும்.
இந்த மருந்து என்னிடம் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் கட்டாயமாக சாப்பிடச் சொல்வேன். சர்வ நிச்சயமாக பலன் பெறுவீர்கள்.
இதனைப் படிக்கும் அனைத்து நண்பர்களும் இந்த மருந்தினை அவசியம் சாப்பிட வேண்டும். நோயற்ற வாழ்வு வாழ வேண்டும்.
- டாக்டர் யோகா ரவி - 94441 92892