Tuesday, September 16, 2014

அழிவில்லா ஆரோக்கியம் தரும் மஞ்சளின் மகிமை

ஜெயாசுந்தரம்
40 வயது ஆனதும் மார்பகப்புற்றுநோய், கர்பப்பையில் புற்றுநோய் என்றெல்லாம் வருகிற காலமிது. வருமுன்பே இந்த நோய்களைத் தடுக்க மஞ்சள் உதவுகிறது. பல ஆராய்ச்சிகளின் மூலம் மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்பட்டு புற்றுநோய்க்கு எதிராகச் செயல்பட்டு நம்மையும், நம் ஆரோக்கியத்தையும் காப்பது உண்மையே.
இந்த மஞ்சள், பொதுவாக நம் உணவில் பொடியாகச் சேர்த்துக் கொள்ளப்படுகிறது. இந்தப் பொடிகளில் கலப்படம் இருப்பதற்கான வாய்ப்பும் அதிகம். தமிழ் நாட்டைப் பொறுத்தவரை மஞ்சள் தைப்பொங்கலின் போது மட்டும் தான் கிடைக்கும்.
ஆனால் இதே மஞ்சள் மகாராஷ்டிரா மாநிலத்தில் கோலாப்பூர்(கோல்ஹாப்பூர்) மாவட்டத்தில் வருடம் முழுவதும் விளைகிறது.
எனவே இங்குள்ள மக்கள் இதை ஊறுகாயாக செய்து அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளுகிறார்கள். தமிழகத்தில் பொங்கல் வரும் சமயம் இது. எனவே நம் தமிழ்ச் சகோதரிகள் பொங்கல் சமயத்தில் கிடைக்கும் பசுமஞ்சளை, ஊறுகாயாகச் செய்து பயன்படுத்தி உடல் நலனை பாதுகாத்துக் கொள்ளலாமே.
நம் தமிழ்ச் சகோதரிகளுக்காக மஞ்சள் ஊறுகாய் செய்யும் மூன்று விதமான செய்முறைகளை கீழ்கண்டவாறு விளக்குகிறேன்.
செய்முறை 1:
தேவையான பொருட்கள்:
பசுமஞ்சள்- 100 கிராம்
எலுமிச்சம் பழம்- 2
பச்சைமிளகாய் -1
தாளிக்க – நல்லெண்ணெய் 2 தேக்கரண்டி
கடுகு- ½ தேக்கரண்டி
பெருங்காயம்- 2 சிட்டிகை
உப்பு – ஒரு தேக்கரண்டி
செய்முறை:
முதலில் மஞ்சளை நன்றாகக் கழுவி விட்டு பின்பு தோல்சீவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். நறுக்கிய மஞ்சளில் உப்பைப் போட வேண்டும். அடுப்பில் எண்ணெய் வைத்து கடுகு தாளித்து, பச்சைமிளகாய் நறுக்கிப் போட்டு, இத்துடன் பெருங்காயத்தூளையும் போட்டு சற்று பிரட்டிய பின் மஞ்சளில் போட்டு விடவும். எலுமிச்சைச் சாற்றைப் பிழிந்து மஞ்சளில் நன்றாகக் கலக்கினால், உடனடியாக மஞ்சள் ஊறுகாய் தயார். அதிகபட்சம் இந்த ஊறுகாயை இரண்டு நாட்கள் வைத்துக்கொள்ளலாம்.
செய்முறை:2
தேவையான பொருட்கள்:
பசுமஞ்சள்- 100 கிராம்
நல்லெண்ணெய்- 100 கிராம்
மிளகாய்த்தூள்- 2 தேக்கரண்டி
பொடி உப்பு- 2 தேக்கரண்டி
கடுகு- ஒரு தேக்கரண்டி
வறுத்த வெந்தயப்பொடி- 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்- ஒரு சிட்டிகை
செய்முறை:
மஞ்சளை நன்றாகக் கழுவி தோல் சீவி பொடிப்பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்ததும் பெருங்காயத்தூள் போடவும். பின்பு நறுக்கிய மஞ்சளைப் போட்டு சற்று லேசாக வதக்கவும். பிறகு மிளகாய்த்தூள், உப்பு, வெந்தயப்பொடி எல்லாவற்றையும் கலந்து ஒரு முறை வதக்கவும். நன்கு ஆறியதும் காற்றுப் புகாத உலர்ந்த பாட்டிலில் வைக்கவும். ஒரு வாரம், பத்து நாள் வரை இந்த ஊறுகாய் நன்றாக இருக்கும்.
செய்முறை:3
தேவையான பொருட்கள்:
பசுமஞ்சள்- 100 கிராம்
நல்லெண்ணெய்- 100 கிராம்
மிளகாய்தூள்- 2 தேக்கரண்டி
உப்பு- 2 தேக்கரண்டி
கடுகு – 1 தேக்கரண்டி
வறுத்த பொடித்த வெந்தயத்தூள்- 1 தேக்கரண்டி
பெருங்காயத்தூள்- 1 சிட்டிகை
செய்முறை:
மஞ்சளை நன்றாகக் கழுவி நறுக்கி மிக்சியில் போட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் வைத்து கடுகு, பெருங்காயத்தைப் போடவும், கடுகு வெடித்ததும் அரைத்து வைத்துள்ள மஞ்சள் விழுதைப் போட்டு சற்று வதக்கவும். பின் உப்பு, மிளகாய்த்தூள், வெந்தயத்தூள் போட்டு எண்ணெய் நன்றாகப் பிரிந்து வரும் வரை கிளற வேண்டும். இந்த மஞ்சள் தொக்கும், காற்றுப் புகாத உலர்ந்த பாட்டில்களில் வைக்கும் பொழுது ஒரு வாரம், பத்து நாட்கள் வரை நன்றாக இருக்கும்.
இந்த மூன்று முறைகளில் எது வசதியானதோ அதைச் செய்து வைத்துக்கொண்டு உணவோடு கலந்து உண்பதன்மூலம் புற்றுநோய் என்றும் கொடிய நோயிலிருந்து நிச்சயமாக நாம் நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும் என்பது உண்மையே.

No comments:

Post a Comment