Thursday, December 18, 2014

காயகற்பம் சில தகவல்கள்!!!

நரை ,திரை , பிணி,மூப்பு,மரணம் இவற்றிலிருந்து உடம்பை காத்துகொள்வதே காயகற்பம் என்பதாகும். கொங்கணர்,போகர்,திருமூலர் என பல சித்தர்களின் நூல்களில் கற்பங்களின் செய்திகள் காணக்கிடக்கின்றன. கற்பங்களை பொது கற்பம்,சிறப்பு கற்பம் என இருவகைகளாக பிரிக்கலாம். பொதுவான நோயற்ற நிலையில் உண்ணுகிற கற்ப முறை பொது கற்பம் என்றும். மற்றொன்று ஒரு குறிப்பிட்ட நோயை நீக்கி உடலை காயகற்பமாக்கும் முறையாகும்.
பொதுவாக மிளகு,சிந்தில்,வேம்பு, நெல்லி, கடுக்காய், குமரி, வில்வம்,கரிசாலை, தூதுவளை இவைகள் மூலிகைக் கற்பங்களில் அடங்கும். அண்டம் என்னும் முட்டை ஓடு கற்பம்,உப்புக் கட்டு , வங்கச்சுண்ணம் போன்றவை தாது மற்றும் ஜீவ கற்பங்களாகும். கற்ப மூலிகைகள் அறுபதும், தாது கற்பங்கள் அறுபதும், உலோகங்களான தங்கம், பாதரசம் சேர்த்து 122 காயகற்பங்கள் உள்ளன.
காயத்தைக் கற்பமாக்குவதன் மூலம் , வாத சித்தி என்னும் ரச வாதத்தையும், வாத சித்தியால் , யோக சித்தி என்னும் இறை நிலையை அடைதலையும் சமாதி என்று சித்தர்கள் குறிப்பிட்டுள்ளனர்.உடலை பாதுகாக்காமல் அழியவிட்டால், உடம்பில் உள்ள உயிரும் அழியும்,அவ்வாறு உடலும் உயிரும் அழிய நேரிட்டால் இறைநிலையை அடைய முடியாது. எனவே, காயகற்ப முறைகள் மூலமாக உடலின் நரை,திரை,பிணி,மூப்பு போன்றவற்றை நீக்கி இறப்பைத் தடுத்திடலாம் என்பது சித்தர்கள் வாக்கு.இறைநிலையை அடை உடலை பாதுகாக்க வேண்டும் என்பதை இந்த திருமூலரின் பாடலின் மூலம் அறியலாம்.
உடம்பால் அழியின் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவுமாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே
மூலிகை கற்பங்களை நாற்பது நாள்கள் சாப்பிட வேண்டும் அவ்வாறு சாப்பிடும்போது மலச்சிக்கல், தொண்டையில் வழவழப்பு இவற்றை நீக்குவதற்கு ஒரு சில கற்ப மூலிகைகளை சாப்பிட்ட பிறகு முறையான கற்பத்தை சாப்பிட வேண்டும் என்பதே சித்த மருத்துவத்தின் முறையாகும்.அத்தகைய கற்ப மருந்துகளை சாப்பிடும்போது புளி ,உப்பு,எள்,நெய் ,மாமிசம்,மோர்,கடுக,பூண்டு,உடலுறவு,பகல் தூக்கம் இவற்றை நீக்கி பிராணாயாமம்,தியானம் செய்து வரவேண்டும். கற்ப மருந்துகளை சாப்பிடும்போது பசுவின் பாலும் நெய்யும் சேர்த்து ஒரு பொழுது மட்டுமே உணவு சாப்பிடவேண்டு. இரவில் சிறிது பசும்பாலை மட்டுமே உணவாக கொள்ளவேண்டும். பச்சைப்பயிறு,தேன்,பழங்கள் சேர்த்துக் கொள்ளலாம்.
கடுக்காய் கற்பம் !!
கடுக்காய் என்ற மூலிகை கற்பத்தை பயன்படுத்தும் முறையை போகர் தன் போகர் 7000 த்தில் இவ்வாறு கூறுகிறார்.
சித்தரை , வைகாசி , மாதங்களில் சுக்கு நீரோடும்.
ஆனி,ஆடி,ஆவணி மாதங்களில் வெல்லம் கலந்தும்.
புரட்டாசி மாதத்தில் தேன் கலந்தும்.
ஐப்பசி, கார்த்திகை,மாதங்களில் குமரிச்சாறு (கற்றாழைச்சாறு) கலந்தும்.
மார்கழி , தை ,மாசி மாதங்களில் கற்கண்டு சேர்த்தும்.
பங்குணி மாதத்தில் நெய் சேர்த்தும் சாப்பிட வேண்டுமாம். இவ்வாறு சாப்பிட வாதம்,பித்தம்,கபம் மூன்றும் நீங்கி உடல் வணப்பு உண்டாகும்.
மிளகு கற்பம்!!!
பொதுவான கற்ப விதிகளுடன் ,முதல் நாள் ஐந்து மிளகு சாப்பிடத் தொடங்கி, ஒவ்வொரு நாளும் ஐந்து மிளகு கூட்டிக் அமுரியில் கலந்து 100 மிளகு ஆகும் வரை கலையில் சாப்பிட வேண்டும். பிறகு ஒவ்வொரு நாளும் 5 மிளகு குறைத்து 20 நாட்களுக்கு காலையில் சாப்பிட வேண்டும். அத்துடன் மாலையில் அருகம்வேர் 35 கிராம்,25 மிளகை சேர்த்து இடித்து தண்ணீரில் கரைத்து சிறிது வெண்ணை சேர்த்து உட்கொள்ள வேண்டும்.
அமுரி என்பது சிறுநீர்,பனிநீர், இளநீர், பழைய சோற்றின் நீர், எலுமிச்சம் பழச்சாறு என்று பலவகையாகச் சொல்லப்பட்டாலும், பொதுவாக மெத்தன் வாழை மரத்தில் துருசுச் சுண்ணம் என்ற மருந்தை வைக்க அதனால் அடித்தண்டில் வடியும் நீர்தான் அமுரி என்ப்படுகிறது. இருந்தாலும், எலுமிச்சம் பழச்சாறு, பழைய சோற்றின் நீரும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும்.
சிவகரந்தைக் கற்பம் !!!
சிவகரந்தைச் செடியை வேருடன் எடுத்து நிழலில் உலர்த்தி தூளாக்கி பால், நெய், தேன் இவற்றில் ஏதாவது ஒன்றுடன் சேர்த்து தினமும் சிறிது அளவு சாப்பிட்டு வந்தால் முதல் மாதம் உடல் நாற்றம் நீங்கும் என்றும், இரண்டாம் மாதம் வாத நோய்கள் நீங்கும் என்றும், மூன்றாம் மாதம்,பித்த நோய்கள் நீங்கும் என்றும்,நான்காம் மாதம் தோல் நோய்கள் நீங்கும் என்றும் , ஐந்தாம் மாதம் பசி கூடும் என்றும்,ஆறாம் மாதம் அறிவும் தெளிவும் உண்டாகும் என்றும்,ஏழாம் மாதம் உடல் வனப்பு உண்டாகும் என்றும்,எட்டாம் மாதம் உடல் தோல் உரியும் என்றும், ஒன்பதாம் மாதம் நரை,திரை,பிணி நீங்கும் என்றும் யோகம் சித்தியாகும் என்றும் ‘சித்தர் காயகற்பம் விளக்குகிறது’ என்று ‘சித்த ரகசியம் என்ற நூலில் படித்தது’.
விஷ்ணு கரந்தை கற்பம் !!!
விஷ்ணு கிரந்தி அல்லது விஷ்ணு கரந்தை செடியை அரைத்து, பாலில் கலந்து காலையில் சாப்பிட்டு வந்தால் நாற்பது நாட்களில் உடல்சூடு நீங்கி,கண் பிரகாசமாகி, சுவாசம் கட்டுப்படும். அதன்பிறகு, நாற்பது நாள்கள் தேன் கலந்து சாப்பிட யோகம் சித்தியாகும்.
http://www.tamilkadal.com/

No comments:

Post a Comment