Wednesday, November 5, 2014

எள்ளுத் தாத்தா 1880'ல் எழுதி வைத்த வைத்தியம் !!!

பழமை பழமை யென்று பாவனை பேசலன்றிப்
பழமை இருந்த நிலை - கிளியே!
பாமரர் ஏதறி வார்!!
-- பாரதியார்
லிங்க வீக்கத்திற்கு:
கற்றாழைச் சோற்றை ஏழுதிரம் கழுவியெடுத்து கொருக்குரிணம் கண்டு வீக்கம் உண்டாயிருக்கும் லிங்கத்தின் மீது ஒரு இராத்திரி வைத்துக் கட்ட வாடிப் போகும்.
பிள்ளைகள் அடித்தள்ளினதற்கு:
கரிசலாங்கண்ணியும் பழம்புளியும் சரியிடை வைத்தரைத்து, புன்னைக்காயளவு எட்டு நாள் கொடுக்கத் தீரும்.
விக்கல் வாந்தி சுரத்திற்கு:
கண்டங்கத்திரிவிரை அமுக்குரா சமூலம் திப்பிலி இவை சமனிடை போட்டு கசாயம் வைத்து, தேன் முலைப்பால் விட்டுக் கொடுக்கத் தீரும்.
விரை வீக்கத்திற்க்கு:
கெச்சக்கா இலையை துளி விளக்கெண்ணை விட்டு வதக்கி விரையின் மேல் வைத்துக் கட்டி வைக்கவும். காலையில் பேதிக்கு சாப்பிட்டு வர வீக்கம் நீங்கும்.
காமாலை-சோகை-பாண்டுக்கு:
கோசலமென்னும் சிறுவர் சிறுநீறும் வெள்ளாட்டுப் பாலும் சரியாய்க் கலந்து உட்கொண்டு வந்தால், சோகை‍‍-காமாலை-பாண்டு‍-பித்தம் இவை தீரும்.
நாடியிறுக‌:
சத்திசாட்டரணை மூலத்தை சூரணித்து, சக்கரை கலந்து திருகடியளவு உண்டு வந்தால் நாடியிறுகும். விந்து நன்றாக உண்டாகும்.
சுண்டைக்காய் ப‌ற்றிய‌ வெண்பா
நெஞ்சிற் க‌ப‌ம்போகும் நிரைகிருமி நோயும்போகும்
விஞ்சுவாத‌த்தின் விளைவும்போகும்! வ‌ஞ்சிய‌ரே
வாயைக்க‌ச‌ப்பிக்கும் மாம‌லையி லுள்ள‌சுண்டைக்
காயைச் சுவைப்ப‌வ‌ர்க்குக் காண்!
பாராம விட்டாக் கெடும், பழசு! பழசக் கேளாம விட்டாக் கெடும், புதுசு!!
ஆறு சுவைகள் பழங்கால இந்திய மருத்துவங்களும், ஆயுர்வேதமும் நா அறியக்கூடிய சுவைகளை ஆறு வகைகளாகப் பிரிக்கின்றன. ஆயுர்வேதம், உடலின் ஆறு முக்கிய தாதுக்களுடன் இச்சுவைகளைச் சம்பந்தபடுத்தி, உடல் வளர்ச்சியில் இச்சுவைகளின் பங்குகளை விளக்குகின்றது.
இனிப்பு, புளிப்பு, உவர்ப்பு, கசப்பு, கார்ப்பு மற்றும் துவர்ப்பு ஆகிய இந்த ஆறுசுவைகளின் பண்புகளையும், உடல் நலத்திற்கு இவற்றின் பங்குகளைப் பற்றியும் இப்ப பாக்கலாம். தொன்றுதொட்டு பழக்கத்தில் இருந்து வரும் இந்திய மருத்துவங்களாகிய ஆயுர்வேதம், சித்த மருத்துவம் போன்றவற்றில் சுவைகள் ஆறு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. உடலானது ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு,நரம்பு, உமிழ்நீர், மூளை ஆகிய ஏழு முக்கிய தாதுக்களைக் கொண்டது என்பதனால் உடலை "யாக்கை" என்று கூறினர்.
இதில் ஏழாவது தாதுவான மூளை சரிவர இயங்க முதல் ஆறு தாதுக்கள் தகுந்த அளவில் இருத்தல் அவசியம். இந்த ஆறு தாதுக்களும், ஆறு சுவைகளுடன் கீழ்கண்டவாறு சம்பந்தப்பட்டுள்ளன.
துவர்ப்பு - இரத்தத்தைப் பெருக்குகின்றது
இனிப்பு - தசையை வளர்க்கின்றது
புளிப்பு - கொழுப்பினை வழங்குகின்றது
கார்ப்பு - எலும்புகளை வளர்க்கின்றது
கசப்பு - நரம்புகளை பலப்படுத்துகின்றது
உவர்ப்பு - உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது
அந்த கால மருத்துவங்களும், உணவு முறைகளும் இதனை அடிப்படையாகக் கொண்டே இருந்துவந்தது. உடல் தாதுவைப் பெருக்க, சமன் செய்ய அதற்கு ஏற்றவாறு உணவு வகைகளைத் தயாரித்து வந்தனர். இதனைக் கொண்டுதான் "உணவே மருந்து, மருந்தே உணவு" என்று சொல்வார்கள்.
துவர்ப்புச் சுவை (Astringent) இது அதிகம் விருப்பு, வெறுப்பு காட்டப்படாத சுவை. உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்த சுவை. அதிக வியர்வையைக் கட்டுப்படுத்துகின்றது. இரத்தப்போக்கினைக் குறைக்க வல்லது. வயிற்றுப்போக்கினை சரி செய்யவல்லது. இது அதிகமாயின், இளமையில் முதுமை தோற்றத்தை உண்டுவிக்கும். வாய் உலர்ந்து போகச் செய்யும், சரளமாக பேசுவதைப் பாதிக்கும். வாத நோய்கள் தோன்ற வழிவகுக்கும். கிடைக்கும் உணவுப் பொருட்கள் வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை, அத்திக்காய் போன்ற காய் வகைகளில் அடங்கியுள்ளது.
இனிப்புச் சுவை (Sweet) மனிதர்களால் அதிகம் விரும்பப்படும் சுவை இதுதான். மனதிற்கு மட்டுமல்லாமல் உடலுக்கும் உடனடி உற்சாகத்தைத் தரக்கூடிய சுவையிது. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றது. இது அதிகமாயின் உடல் தளர்வு, சோர்வு, அதிகத் தூக்கம், இருமல், உடல் எடைக் கூடுதல் போன்ற சிக்கல்கள் பலவும் தோன்ற வாய்ப்பு உள்ளது. கிடைக்கும் உணவுப் பொருட்கள் பழவகைகள், உருளை, காரட் போன்ற கிழங்கு வகைகள், அரிசி, கோதுமை போன்ற தானியங்கள் மற்றும் கரும்பு போன்ற தண்டு வகைத் தாவரங்களிலும் இனிப்புச் சுவை அதிக அளவில் அடங்கியுள்ளது.
புளிப்புச் சுவை (Sour) உணவிற்கு மேலும் ருசி சேர்க்கும் ஒரு சுவையிது. பசியுணர்வைத் தூண்டும். உணர்வு நரம்புகளை வலுப்பெறச் செய்கின்றது. இதயத்திற்கும், செரிமானத்திற்கும் மிகவும் நல்லது. இது அதிகமாயின், தாக உணர்வினை அதிகரிக்கும். பற்களைப் பாதிக்கும். நெஞ்செரிச்சல், இரத்தக் கொதிப்பு, அரிப்பு போன்ற தொந்திரவுகளை உண்டுவிக்கும். உடல் தளரச் செய்யும். எலுமிச்சை, புளிச்ச கீரை, இட்லி, தோசை, அரிசி, தக்காளி, புளி, மாங்காய், தயிர், மோர், நார்த்தங்காய் போன்றவற்றில் அதிகம் உள்ளது.
காரச் சுவை (Pungent) பசியுணர்வைத் தோற்றுவிப்பதோடு அல்லாமல், செரிமானத்திற்கும் பெரிதும் உதவுகின்றது. உடல் இளைக்கவும், உடலில் உள்ள அதிக்கப்படியான நீரை வெளியேற்றவும் செய்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. தோல் நோய்களுக்கு நல்லதொரு பலனைத் தருகின்றது. அதிகப்படியான காரம், உடல் எரிச்சலை உண்டுவிக்கும். உடல் சூட்டை அதிகரித்து, வியர்வையை அதிகம் சுரக்கச் செய்யும். குடல் புண்கள் தோன்ற அதிக வாய்ப்பு அளிக்கும். வெங்காயம், மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, கடுகு போன்றவற்றில் அதிகப்படியான காரச்சுவை அடங்கியுள்ளது.
கசப்புச் சுவை (Bitter) அதிகம் வெறுக்கப்படும் சுவையாக இருந்தாலும், அதிகம் நன்மைப் பயக்கும் சுவையும் இது ஒன்றே. மற்றச் சுவைகளை அறிய இது பெரிதும் உதவுகின்றது. சிறந்த நோய் எதிர்ப்புச் சக்தியாக செயல்படுகின்றது. தாக உணர்வைக் கட்டுப்படுத்துகின்றது. உடல் எரிச்சல், அரிப்புகளில் இருந்து நிவாரணம் தருகின்றது. காய்ச்சலைத் தணிக்கின்றது. இரத்தச் சுத்திகரிப்புச் செய்கின்றது. இது அதிகமாயின், உடலின் நீர் குறைந்துப் போகச் செய்யும். மேனி வறண்டு கடினத்தன்மைத் தோன்ற நேரிடும். எலும்புகளைப் பாதிக்கும். அடிக்கடி மயக்கம் உண்டாகும், உச்சகட்டமாய் சுயநினைவற்ற நிலைக்கும் செல்ல வழிவகுக்கும். பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய், வெந்தயம், பூண்டு, எள், வேப்பம்பூ, ஓமம் போன்றவற்றில் இந்த சுவை மிகுதியாய் உள்ளது.
உவர்ப்புச் சுவை (Salt) தவிர்க்க இயலாத சுவை இது, அளவோடு இருக்கும்பட்சத்தில் அனைவராலும் விரும்பப்படும் ஒன்று. உமிழ்நீரைச் சுரக்கச் செய்கின்றது. மற்றச் சுவைகளைச் சமன்செய்ய உதவுகின்றது. உணவுச் செரிமானத்திலும் பங்கு வகிக்கின்றது. இது அதிகமாயின் தோல் தளர்வினை உண்டுவித்து, சுருங்கிப் போகச் செய்யும். தோல் வியாதிகளையும் தோன்றச் செய்கின்றது. உடல் சூட்டினை அதிகப்படுத்தி சிறுக் கட்டிகள், பருக்கள் தோன்ற வழிவகுக்கும். கீரைத்தண்டு, வாழைத்தண்டு, முள்ளங்கி, பூசணிக்காய், சுரைக்காய், பீர்க்கங்காய் போன்றவற்றில் அதிகமாய் இருக்கின்றது.
வகைப்பாடு பொது, மருத்துவம் 1 comment: பணிவுடன் பழமைபேசி
சமையல் அறையில்.......
சின்ன வெங்காயம்
முதல்ல, சின்ன வெங்காயத்தை அதிகமா சாப்பிடணும். இது இதயநோய், ஆஸ்துமா இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தும். பனிக்காலத்துல வர்ற சுவாசத்தடையை சீராக்கும்.
தேன்
இது மாதிரி ஒரு இயற்கையான மருந்து உலகத்திலே வேறு எதுவும் இல்லை! நாம தேனை சாப்பிடும்போதே ரத்தத்தில் கலந்துவிடும் அரிய மருந்து இது, அதனால்தான் மாத்திரைகளை தேனில் கலந்து சாப்பிடச் சொல்றாங்க வைத்தியருங்க..! இதை தினமும் ஒரு ஸ்பூன் சாப்பிட்டு வந்தா நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாவது மட்டுமல்ல, நினைவாற்றலும் அதிகமாகும். மேலும் உற்சாகம் அதிகரிக்கும். ராத்திரி தூங்குறதுக்கு முன்பு, ஒரு ஸ்பூன் தேனை, மிதமான சூட்டில் உள்ள பாலில் கலந்து சாப்பிட்டால் நல்லா தூக்கம் வரும். அதத்தான் மனுசி சொல்றாங்க, தேன கடவுளுக்கு படச்சா ஆயுள் கூடும்னு. (அவங்களுக்கு கடவுள் நாம தான?!)
தக்காளி
பழங்களில், நாம தினமும் சாப்பாட்டில் சேர்க்கிற தக்காளியைத் தான் முதல்ல சொல்லணும். தக்காளியில் சிவப்பு நிறம்தான் நல்லது. அதுல 'லைஸோபீன்' என்ற மூலப்பொருள் இருக்கு. இது உடலுக்கு ரொம்ப ரொம்ப நல்லது. அதோட, போலிக் ஆசிட், இரும்பு சத்து, வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் இருப்பதால் தக்காளியை தினமும் சேர்ப்பது நல்லது.
முட்டைகோஸ்
காய்கறியில முட்டைக்கோஸில் நிறைய சத்துக்கள் இருக்கு. கண்ணுக்கு மிகவும் நல்லது, நினைவாற்றலையும் அதிகரிக்குது.
மஞ்சள்
மஞ்சளை அடிக்கடி சேர்த்துக்கிட்டா, மறதியை கட்டுப்படுத்தும், நினைவாற்றலை வளர்க்கும். தோலுக்கும், குடலுக்கும் ரொம்ப நல்லது. அப்புறம், இது ஒரு கிருமி நாசினி.
பூண்டு
அடிக்கடி நம்ம சாப்பாட்டுல பூண்டு சேர்த்துக்கிட்டா. வாயு தொந்தரவு இருக்காது. உடம்பில இருக்குற கொழுப்பை தடுக்கும். இடிச்சு சாறும் குடிக்கலாம், உப்போடு சேர்த்து கடிச்சு தின்னலாம். தீயில் சுட்டும் சாப்பிடலாம். வேக வைத்து சாப்பிடுவதும் நல்லதுதான். விடுமுறை நாட்கள்ள மட்டும் தான் இது உகந்தது. வாய் மணம் அடுத்தவங்கள படுத்தும். அதான்!
அடிக்கடி மீன் சாப்பிடுவதும் நல்லது. இதயநோய் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் ரத்தம் கெட்டியாவதை தடுக்கும். குறிப்பா, கடலில் கிடைக்கும் மீனில், அதிக ஒமேகா 3 சத்துக்கள் இருக்குது. நாம சொன்னதை எல்லாம் அடிக்கடி சாப்பிட்டாலே போதும். நோய் எதிர்ப்பு சக்தியும் கூடிடும். ஆரோக்கியமும் கூடும். எந்த நோயும் நம்மை அண்டாது!
பழங்களில் வாழைப்பழமும், மாம்பழமும் அதிகமாக சாப்பிடலாம். திராட்சைப் பழம் ஜீரணத்தை அதிகரிக்கும். உடம்பில் இருக்கும் விஷத்தன்மையை, வெளியேற்றும். உடம்பை புஷ்டியாக்கும். பப்பாளி, அன்னாசி போன்ற பழங்களையும் அடிக்கடி சாப்பிடலாம். பப்பாளி, ஜீரணத்தை வேகப்படுத்தும். அதில் சத்துக்கள் அதிகமாக இருக்கு. மேலும் வாயு தொந்தரவை குறைக்கும்.
நெஞ்சுச்சளி
தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி குணமாகும்.
தலைவலி
ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி குணமாகும்.
தொண்டை கரகரப்பு
சுக்கு, பால் மிளகு, திப்பிலி, ஏலரிசி ஆகியவற்றை வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.
தொடர் விக்கல்
நெல்லிக்காய் இடித்து சாறு பிழிந்து, தேன் சேர்த்து சாப்பிட்டால் தொடர் விக்கல் தீரும்.
வாய் நாற்றம்
சட்டியில் படிகாரம் போட்டு காய்ச்சி ஆறவைத்து அதனை ஒரு நாளைக்கு மூன்று வேளை வாய் கொப்பளித்து வந்தால் வாய் நாற்றம் போகும்.
உதட்டு வெடிப்பு
கரும்பு சக்கையை எடுத்து எரித்து சாம்பலாக்கி, அதனுடன் வெண்ணெய் கலந்து உதட்டில் தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.
அஜீரணம்
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை, இஞ்சி, சீரகம், மூன்றையும் கொதிக்க வைத்து ஆறவைத்து வடிகட்டி குடிக்க அஜீரணம் சரியாகும்.
குடல்புண்
மஞ்சளை தணலில் இட்டு சாம்பல் ஆகும் வரை எரிக்க வேண்டும். மஞ்சள் கரி சாம்பலை தேன் கலந்து சாப்பிட குடல் புண் ஆறும்.
வாயு தொல்லை
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண் நீங்கும்.
வயிற்று வலி
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி நீங்கும்.
மலச்சிக்கல்
செம்பருத்தி இலைகளை தூள் செய்து, தினமும் இருவேளை சாப்பிட்டு வர மலச்சிக்கல் தீரும்.
சீதபேதி
மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி குணமாகும்.
பித்த வெடிப்பு
கண்டங்கத்திரி இலைசாறை ஆலிவ் எண்ணையில் காய்ச்சி பூசி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மூச்சுப்பிடிப்பு
சூடம், சுக்கு, சாம்பிராணி, பெருங்காயம் இவைகளை சம அளவு எடுத்து சேர்த்து வடித்த கஞ்சியில் கலக்கி மறுபடியும் சூடுபடுத்தி மூச்சுப்பிடிப்பு உள்ள இடத்தில் மூன்று வேளை தடவினால் குணமாகும்.
சரும நோய்
கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடம்பில் தேய்த்து குளித்து வர சரும நோய் குணமாகும்.
தேமல்
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்து குளித்து வர தேமல் குணமாகும்.
மூலம்
கருணைக் கிழங்கை சிறுதுண்டுகளாய் நறுக்கி துவரம் பருப்புடன் சேர்த்து, சாம்பாராக செய்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.
தீப்புண்
வாழைத் தண்டை சுட்டு அதன் சாம்பலை தேங்காய் எண்ணையில் கலந்து தடவி வர தீப்புண், சீழ்வடிதல் மற்றும் காயங்கள் விரைவில் குணமாகும்.
மூக்கடைப்பு
ஒரு துண்டு சுக்கை தோல் நீக்கி அரை லிட்டர் நீரில் போட்டு சுண்டக் காய்ச்சி, பால், சர்க்கரை சேர்த்துக் காலை, மாலை சாப்பிட்டு வர மூக்கடைப்பு விரைவில் நீங்கும்.
வரட்டு இருமல்
எலுமிச்சம் பழசாறு, தேன் கலந்து குடிக்க வரட்டு இருமல் குணமாகும்.
நாவறட்சி,வாய் நாற்றம் நீங்க:காட்டு மல்லிகை சமூலத்தை கொண்டு வந்து சீந்தல் மதுரம் சமயிடை சேர்த்து, கசாயம் செய்து குடித்து வர நாவறட்சி நீங்கும்.
வாந்தி விக்கலுக்கு:கிராம்பு ஏலம் சீரகம் வெதுப்பி, மயிலிரகு சுட்ட சாம்பல் சமன் சேர்த்து பொடித்து தேனில் கலந்து சாப்பிட வாந்தி விக்கல் நீங்கும்.
சொரி சிரங்கு தினவு நீங்க:தாழம்பூ வேர் எடுத்து சக்கரை சேர்த்து, சர்பத்து போல் பதமாய் கலந்து சாப்பிட்டு வர, சொரி சிரங்கு தினவு நீங்கும்.
பல்,ஈறு வலுவடைய:நன்னாரி வேரில் கசாயம் செய்து தினமும் கொப்பளித்து வர, பல்ஈறு ஆரோக்கியமாக இருக்கும்.
மயிர் வளர:சாடமஞ்சியை எண்ணெய் விட்டு காய்ச்சி வைத்து கொண்டு தலை முழுகி வந்தால், மயிர் வளரும். மயிரும் வாசனை உள்ளதாக இருக்கும்.
பசி உண்டாக: கொழிஞ்சி வேர் கசாயம் வைத்து அதில் சர்க்கரை கலந்து சாப்பிட்டால் பசி உடனே உண்டாகும்.
பித்த வாயுவுக்கு:சிவதை வேர், திரிகடுகு சரியிடை கொண்டு சூரணீத்து சக்கரை சமன் கலந்து திருகடி அளவு தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் வாயுவு நீங்கும்.
கண் நோய் நீங்க:நந்தியாவட்டை பூவை நன்கு பிழிந்து கண்ணில் விட்டு வந்தால், கண்காசம் படலம் நீங்கும்.
இருமலுக்கு:இஞ்சி சாறும் மாதுளைப்பூ சாறும் சமனாய் கலந்து ஒரு வேளைக்கு அரிக்கால் படி வீதம் குடித்து வர இருமல் நீங்கும்.
இதுவுமது (மேற்படி நோய்க்கு):இஞ்சிச்சாறும் ஈரவெங்காயச்சாறும் எலுமிச்சைச்சாறும் சமனாகக் கலந்து குடிக்க இருமல் நீங்கும்.
கட்டி கரைய:ஊமத்தை இலையை விளக்கெண்ணெய் விட்டு வதக்கி கட்டிகளின் மேல் வைத்துக்கட்ட கட்டி கரையும். பெருத்த கட்டிகள் உடைந்து வற்றி விடும்.

No comments:

Post a Comment