Monday, November 17, 2014

பூண்டு – மிளகுக் குழம்பு

தேவையானவை: உரித்த பூண்டு – ஒரு கிண்ணம், தனியா – 3 டேபிள்ஸ்பூன், மிளகு – 2 டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, உளுத்தம்பருப்பு, சீரகம் – தலா 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி, புளி – சிறிய உருண்டை, உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன்.
செய்முறை: கடாயில் தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு ஆகியவற்றை வரட்டு வறுவலாக வறுத்து மிக்ஸியில் பொடிக்கவும். சீரகம், கறிவேப்பிலையைப் பச்சையாக அரைத்துக்கொள்ளவும். கரைத்த புளித்தண்ணீரில் கறிவேப்பிலை விழுது, வறுத்து அரைத்த பொடி, உப்பையும் போட்டுக் கட்டி இல்லாமல் கரைத்து வைத்துக்கொள்ளவும்.
கடாயில் அரை ஸ்பூன் எண்ணெய் விட்டு உரித்த பூண்டு சேர்த்து, லேசாகச் சிவக்கும் வரை வறுத்து தண்ணீர் ஊற்றி வேகவிடவும். வெந்ததும், புளிக்கரைசலைச் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவிடவும். கெட்டியானதும் இறக்கவும். மீதம் உள்ள எண்ணெயில் கடுகு தாளித்துச் சேர்க்கவும்.
மருத்துவப் பலன்கள்: பசியைத் தூண்டி, செரிமானத்தைத் தரும். நோய்த் தொற்றைத் தடுக்கும். பூண்டுக்கு, கொழுப்பைக் குறைக்கும் தன்மை உண்டு.
http://yazhinimaran.wordpress.com/

கொள்ளு குழம்பு

தேவையானவை: கொள்ளு – அரை ஆழாக்கு, நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2, கடுகு – ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – ஓர் ஆர்க்கு, மிளகாய்தூள் – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன், தனியா தூள் – 3 டீஸ்பூன், புளி – எலுமிச்சம்பழ அளவு, கொத்துமல்லித் தழை – சிறிதளவு, உப்பு – தேவைக்கேற்ப.
அரைக்க: சின்ன வெங்காயம் – 2 கையளவு, தக்காளி – 4, பூண்டுப் பல் – 6.
செய்முறை: கொள்ளை முந்தைய நாள் இரவே ஊறவைக்கவும். தக்காளியை நறுக்கிக்கொள்ளவும். புளியைக் கரைக்கவும். ஊறவைத்த கொள்ளை, நன்றாக வேகவைத்து, கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் நல்லெண்ணெய் விட்டு சூடாக்கி கடுகு, கிள்ளிய காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டுப் பொரித்து, தக்காளி, வெங்காயம் அரைத்த விழுதையும் போட்டுச் சுண்ட வதக்கவும்.
இதில் மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியாதூள் சேர்த்து புளிக்கரைசலை ஊற்றி, உப்பு சேர்க்கவும். அரைத்த கொள்ளு விழுதையும் சேர்த்து மிதமான தீயில் கொதிக்கவிடவும். கெட்டியாகும் வரை கொதித்ததும் கொத்துமல்லித் தழை சேர்க்கவும்.
மருத்துவப் பலன்கள்: ஊளைச்சதை குறைய மாதம் இருமுறை கொள்ளுக்குழம்பு சாப்பிட்டுப்பாருங்கள். கொழுத்த உடம்பு குறையும்.


இஞ்சிப் பூண்டு தொக்கு

தேவையானவை: தோல் நீக்கப்பட்ட பிஞ்சு இஞ்சி வில்லைகள், உரித்த பூண்டு – தலா ஒரு கிண்ணம், காய்ந்த மிளகாய் – 10, புளி – எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு, வெல்லம் – சிறு உருண்டை, நல்லெண்ணெய் – அரை கிண்ணம், கடுகு – ஒரு டீஸ்பூன்.
செய்முறை: இஞ்சி, புளி, பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் இவை எல்லாவற்றையும் கல் உரலில் கரகரப்பாக அரைத்துக்கொள்ளவும். இரும்புக் கடாயில், எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகைப் போட்டு வெடித்ததும், அரைத்த விழுதைப் போட்டுக் கிளறவும். சுருண்டு வரும்போது, வெல்லம் சேர்த்துக் கிளறி எடுத்துவைக்கவும். கெடாமல் இருக்கும்.
மருத்துவப் பலன்கள்: அன்னத்துவேஷம், பசியின்மை, வயிறு மந்தம் ஆகியவற்றுக்குக் கைகண்ட மருந்து. பாலூட்டும் தாய்மார் களுக்குச் சிறந்தது.

தேங்காய்க் கஞ்சி

தேவையானவை: அரிசி – ஓர் ஆழாக்கு, உளுத்தம்பருப்பு – 3 டேபிள்ஸ்பூன், தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி, கசகசா – ஒரு டேபிள்ஸ்பூன், பால் – ஒரு கப்.
செய்முறை: அரிசியை ஊறவைக்கவும். உளுத்தம்பருப்பை சிவக்க வறுக்கவும். கசகசாவைப் பொடி செய்துகொள்ளவும். பிரஷர் குக்கரில் 4 டம்ளர் தண்ணீர் விட்டு கொதிக்கவைக்கவும். ஊறிய அரிசியைத் தண்ணீரோடு அதில் சேர்த்து, வெயிட் போடாமல் கொதிக்கவைக்கவும். முக்கால் பாகம் வேகும்போது, வறுத்த உளுந்து சேர்த்து மூடி, ஒரு விசில் வரும் வரை வேகவிடவும். இதில் தேங்காய், பொடித்த கசகசா, பால் சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு குழைய எடுக்கவும். தொட்டுக்கொள்ள சட்னி அல்லது மாவடு தண்ணீர் ஜோராக இருக்கும்.
மருத்துவப் பலன்கள்: மாவுச் சத்து, புரதச் சத்து, கொழுப்புச் சத்து மூன்றும் சேர்ந்த, சரிநிகர் உணவு. எல்லோருக்குமே ஏற்றது என்றாலும், குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
http://yazhinimaran.wordpress.com/

கறிவேப்பிலைக் குழம்பு

தேவையானவை: விழுதாக அரைக்க: நல்லெண்ணெய் – ஒரு டீஸ்பூன், துவரம் பருப்பு – 2 டேபிள்ஸ்பூன், கடலைப் பருப்பு – ஒரு டீஸ்பூன், மிளகு – 2 டீஸ்பூன், தனியா – ஒரு டேபிள்ஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய்த் துருவல் – 2 டேபிள்ஸ்பூன், நல்ல கொழுந்து கறிவேப்பிலை – ஒரு கிண்ணம்.
குழம்புக்கு: நல்லெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம், மஞ்சள்தூள் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – கால் டீஸ்பூன், சின்ன வெங்காயம் – 5, பூண்டுப் பல் – 4, புளி – எலுமிச்சம்பழ அளவு, உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, அரைக்க வேண்டியதை எல்லாம் ஒவ்வொன்றாகப் போட்டு வறுக்கவும். ஆறிய பிறகு, சிறிது தண்ணீர் சேர்த்து மைய அரைக்கவும். அம்மியில் அரைத்தால், ஊரே மணக்கும். இருப்புச் சட்டியில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கடுகு, வெந்தயம், பெருங்காயம் பொரித்து, உரித்த வெங்காயம், பூண்டுப் பல் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும். இதனுடன் அரைத்த விழுதைச் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கவும். மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளிக் கரைசலை ஊற்றிக் கொதிக்கவிட்டு, கெட்டியானதும் இறக்கவும். சுடச்சுட சாதத்தில் கெட்டிக் கறிவேப்பிலைக் குழம்பு விட்டு சாப்பிட, சுவை சுண்டியிழுக்கும்.
மருத்துவப் பலன்கள்: ஜீரணத்தைத் தூண்டும். சிறுசிறு ரத்தக் குழாய்களுக்கும் ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்.

Sunday, November 16, 2014

கற்பூரவல்லி

வேறுபெயர்கள்- ஓமவல்லி, ஒதப்பன்னா, பாசானபேதி, கண்டிரி போரேஜ்.
பசுமையான இந்த தாவரம் நல்ல கனமான, வட்டவடிவான வாசனைமிகுந்த அழகிய இலைகளை உடையது. இலை ஓரங்கள் கத்தரித்துபோல் அழகாய் இருக்கும். பூக்கள் சிறியதாக இருக்கும். தண்டுகளை நட்டு இந்த செடியை வளர்க்கலாம். தமிழ் முனிவர் அகத்தியரால் கற்பூரவல்லியின் பயன்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.
சளி, கபத்திற்கு அருமருந்தான இந்த மூலிகையை பற்றி அகத்தியர் கற்பாறை யத்து நெஞ்சில் கட்டு கபம் வாதம் போம் என்று பாடியிருக்கிறார்.
கற்பூரவள்ளி (Coleus aromaticus) ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இலங்கை, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படும் இது, புதராக வளருகிறது. வாசனை மிக்கதான இச்செடியின் தண்டு முள்போல நீண்ட மயிர்த் தூவிகளைக் கொண்டிருக்கும். இதன் இலைகள் தடிப்பாகவும் மெதுமெதுப்பாகவும் இருக்கும். கசப்புச் சுவையும் காரத்தன்மையும் வாசனையும் இதன் இலை மருத்துவ குணம் கொண்டதாகும். இது வீடுகளில் பரவலாக வளர்க்கப்படுகிறது.
இந்தியாவின்அனைத்துப்பகுதிகளிலும் இத்தகைய மூலிகைச் செடி நன்றாக வளரும். இதை வீட்டில் உள்ள சிறிய தோட்டத்தில் கூட வளர்த்து உடனடி நிவாரணத்திற்குப் பயன்படுத்துகின்றனர். இதற்கு நல்ல வடிகால் வசதியுள்ள குறு மண் மற்றும் வண்டல் மண்,செம்மண், களிகலந்த மணற்ப்பாங்கான இரு மண் பாட்டு நிலம் ஏற்றது.6.5 - 7.5 வரையிலான கார\ அமிலத்தன்மை ஏற்றது.தட்ப வெப்பம் குறைந்தது 25* செல்சியஸ் முதல்35* செல்சியஸ் இருக்க வேண்டும். இனப்பெருக்கம் செய்ய 4 இலைகளுடன் கூடுய சுமார் 4 அங்குலம்நீளம் கொண்ட தண்டுகளை நட்டு நீர் பாச்சினால்ஒரு மாதத்தில் நாற்று வளர்ந்து விடும். 6 மாதத்தில் பூக் காம்புகள் உருவாகும் போதே அதனை அகற்றிவிடவேண்டும். சுமார் 8 மாதத்தில் இலைகள் முதிர்வடைகின்றன. அப்போதுதான் 'மென்தால்' சதவிகிதம்அதிகமாக்க காணப்படும்.
5)பயன்தரும் பாகங்கள் - தண்டு, இலைகள் ஆகியவை.
6)பயன்கள் - கற்பூரவல்லி தாவரத்தின் பாகங்கள்இருமல், சளி, ஜலதோஷம் போன்ற நோய்களுக்குமுக்கிய மருந்து. வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றிக் காச்சல் தணிக்கும் மருந்தாகும்.
இலைச் சாற்றை சர்கரை கலந்து குழந்தைகளுக்குக்கொடுக்க சீதள இருமல் தீரும்.
இலைச்சாறு, நல்லெண்ணெய், சர்க்கரை இவற்றை நன்குகலக்கி நெற்றியில் பற்றுப் போடத் தலைவலி நீங்கும்.சூட்டைத் தணிக்கும்.
இலை, காம்புகளைக் குடிநீராக்கிக் கொடுக்க இருமல்,சளிக் காச்சல் போகும். -
இதன் இலைகளை எடுத்து கழுவி சாறெடுத்து இரண்டு மி.லி சாருடன் எட்டு மி.லி தேனுடன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் மார்பு சளி கட்டுக்குள் வரும்
இந்த மூலிகை குழந்தைகளின் அஜீரண வாந்தியை நிறுத்தக் கூடிய மருத்துவ குணத்தைப் பெற்றிருக்கிறது.
கட்டிகளுக்கு இந்த இலையை அரைத்துக் கட்ட கட்டிகள் கரையும்.
தசைகள் சுருங்குவதைத் தடுக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய், இளைப்பு நோய்களுக்கு உள் மருந்தாகவும், கண் அழற்சிக்கும் இதன் சாறு மேல் பூச்சாக தடவ குணம் தரும்.
மருத்துவ துறையில் இது நரம்புகளுக்குச் சத்து மருந்தாகிறது. மனக் கோளாறுகளைச் சரிசெய்யும்.
சிறுநீரை எளிதில் வெளிக் கொணரவும் பரிந்துரைக்கப்படுகிறது. இரத்தத்தை சுத்தப்படுத்தும் தாவரமாகவும் கருதப்படுகிறது.
குழந்தைகளின் சளியை கட்டுப்படுத்த
குழந்தைக்கு குடிப்பதற்காக கொதிக்க வைக்கும் நீரில், சுத்தமாக அலசி வைத்திருக்கும் 4 அல்லது 5 கற்பூரவல்லி இலைகளைப் போட்டு சிறிது நேரம் கழித்து எடுத்துவிடுங்கள்.
இலையின் சாறு முழுமையாக நீரில் இறங்கி தண்ணீர் லேசாக பச்சை நிறத்தை அடைந்து இருக்கும்.
அந்த நீரை மட்டும் குழந்தை பருகுவதற்குக் கொடுங்கள். 2 அல்லது 3 நாட்களுக்கு இதுபோன்ற நீரையே கொடுத்து வாருங்கள். குழந்தைக்கு சளியின் தீவிரம் கட்டுப்படும்.
வீட்டு வைத்தியத்தில் ஜலதோஷம், இருமல் நீங்க, இரண்டு கற்பூரவல்லி இலைகளை கழுவி, நசுக்கி சாறு பிழிந்து 1/2 தேக்கரண்டி தேனுடன் உண்டால் நிவாரணம் கிடைக்கும். ஒரு இலையை பறித்து கழுவி உணவு உண்பதற்கு முன் கடித்து மென்று சாப்பிட்டால் உணவு ஜீரணம் நன்றாக ஆகும்.
ஆயுர்வேதத்தில் உபயோகங்கள்
இலைகள் பரவலாக, அஜீரணம், ஜலதோஷம், கபம், சளி இவற்றை நீக்க குழந்தைகளுக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
தொன்றுதொட்டு கற்பூரவல்லி இலைகள் உணவு ஜீரணக்கவும், கபம், சளி ஜூரம் குறையவும், பசி பெருகவும் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.
சிறுநீரக நோய்கள், சிறுநீரக கற்கள் ஆஸ்துமா இவற்றுக்கும் நல்ல மருந்து.
சிறு பூச்சிக்கடிகள், ஒவ்வாமையால் தோலில் உண்டாகும் தடிப்புகள், எரிச்சல் இவற்றுக்கு இலைச்சாறு தடவப்படுகிறது.
மேற்கண்டவற்றுக்கு மட்டுமில்லாமல் உணவிலும் கற்பூரவல்லியை, தென் அமெரிக்க தேசங்கள், ஜாவா, இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் ஆகிய தேசங்களில் பயன்படுத்துகிறார்கள்.
கற்பூரவல்லி இலைகளை தேங்காய், பருப்பு, மிளகாய், கொத்தமல்லி, கறிவேப்பிலை சேர்த்து சட்னியாக செய்து சாப்பிடலாம். உடலின் சளி நீங்க இலைகளை அரைத்து நீர்கலந்து கொதிக்க வைத்து ஏலக்காய், கிராம்பு (சிறிதளவு) மற்றும் ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து 3 நாட்களுக்கு தினசரி 2 வேளை பருகி வரவும்.
http://greatinformationrepository.blogspot.in/

சோரியாஸிஸ் டிப்ஸ்

Baskar Jayaraman added 3 new photos.
சோரியாஸிஸ் டிப்ஸ்
மழைக்காலத்தில் சளி இருமல் மட்டுமல்ல, சில தோல் நோய்களும்
அதிகம் வாட்டும். குறிப்பாக சோரியாஸிஸ் எனும் தோல் நோய்
சிலருக்கு மழைக்காலத்தில் அதிகம் துன்பம் தரும். நன்கு குணமாகி,
அப்பாடா ஒருவழியாய் ஓய்ந்து விட்டது சோரியாஸிஸ் என பெருமூச்சு
விடுகையில், மடமடவென மீண்டும் தலைதூக்கும் இந்த நோய், சிலருக்கு
குளிர்காலத்தில்/ பனிக்காலத்தில் பெரும் தொல்லை தருவதுண்டு.
அவர்கள் இப்பருவத்தில் நோய் இல்லையென்றாலும் முன்பு வந்து போன
இடங்களில் சித்த மருத்துவ தைலங்களைப் பூசுவதும், உணவில் புளிப்பை
அறவே தவிர்ப்பதும் நல்லது. மீன், நண்டு, கோழிக்கறி-போன்றவர்றை
மழைக்காலத்தில் சோரியாஸிஸ் நோய் உள்ளவர்கள் தவிர்ப்பதும்
நல்லதே. ஆனால், நல்ல உடலினருக்கு மழைக்காலத்தில் புளிப்பு நல்லது.
சோரியாஸிஸ் குணமாக:
சோரியாஸிஸ் எனப்படும் ஒரு வகை தோல் நோய் ரத்தம், எலும்பு போன்றவற்றின் சீர்கேடால் நமது சருமத்தைப் பாதிக்கும். இதற்கு இன்றைய நவீன மருத்துவம்கூட முறையான மருந்துகள் இன்றி தவித்து வருகிறது. ஆனால் சித்தர்கள் அருளிய சித்த மருத்துவத்தில் ஏராளமான மருந்துகள் இந் நோயை முற்றிலும் குணப்படுத்தி வருகின்றன. அந்த வகையில் அகத்தி "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு மிகச் சிறந்த பலன் தருவதை என் அனுபவத்தில் கண்டி ருக்கிறேன்.
அகத்திக்கீரை, தேங்காய் பத்தை வகைக்கு 100 கிராம்; சீரகம், கஸ்தூரிமஞ்சள் வகைக்கு 100 கிராம் இவற்றை நீர் சேர்த்து விழுதாய், அதாவது துவையல்போல் அரைத்து, பாதிக்கப்பட்ட பகுதி முழுவதும் தேய்த்துக் குளித்துவர, தோல் நோய்கள் அனைத்தும் விலகும். "சோரியாஸிஸ்' எனப்படும் தோல் நோய்க்கு முறையாக உள்மருந்து எடுத்துக் கொண்டு, இதனை வெளிப்பூச்சாய் பயன் படுத்தி வர, நோயிலிருந்து விரைவில் மீண்டு விடலாம்.
சோரியாஸிஸ் எளிய மருத்துவம்
கார்போக அரிசி-50கிராம்
வெள்ளை மிளகு-10கிராம்
பரங்கி பட்டை சூரணம்-25கிராம்
வேப்பில்லை பொடி-50கிராம்
அனைத்தையும் பொடியாக்கி ஒன்றாக சேர்த்து காலை இரவு சிறிது(கேப்சூல்)அளவு சாப்பிடவும்.
தனியாக திரிபலா சூரணம் சாப்பாட்டிர்க்கு முன் தேனில் கலந்து சாப்பிடவும்.
சோரியாசிஸ் குணமாகும்
சோரியாசிஸ் என்னும் கடுமையான தோல் வியாதி மற்றும் மஞ்சள்காமாலை நோயாளிகள் குணமாக 15 மிளகைப் பொடியாக்கி, இரண்டு தேக்கரண்டி கற்கண்டு சேர்த்து ஒன்றரை டம்ளர் தண்ணீரில் கலந்து காலையில் வெறும் வயிற்றில் அருந்தவும். பத்து நாட்கள் இதே முறையில் அருந்திப் பிறகு அடுத்த ஐந்து நாட்கள் இந்தக் கலவையில் 5 பாதம் பருப்பையும் ஊறவைத்துச் சேர்த்து அரைத்து அருந்தவும். இந்த மருத்துவம் மிகவும் சக்தி வாய்ந்தது. முதல் பதினைந்து நாட்களில் ஓரளவுதான் குணமாகி இருந்தால், அடுத்து பத்துநாட்கள் இடைவெளிவிட்டு மீண்டும் 15 நாட்கள் இதே முறையில் அருந்தி வரவும். இதனால் கல்லீரல் பலம் பெறும்
சோரியாசிஸ் சில உடல் ஆரோக்கிய வழி முறைகள்:
சோரியாசிஸ் இருப்பவர்களுக்கு இது நிச்சயமாக உதவும் என்பதால் இதை பற்றிய சில உடல் ஆரோக்கிய வழிமுறைகளை பற்றி பார்ப்போம்.இந்த அலர்ஜியை பொறுத்தவரை மன அழுத்தம் மற்றும் உணவு ஆகியவற்றை முக்கியமாக பார்க்க வேண்டும்.இதில் எனக்கு தெரிந்த சில கருத்துகளை பற்றி பார்ப்போம்.
முதலில் நாம் என்ன செய்கின்றோமோ இல்லையோ ஒரு நாளைக்கு குறைந்தது ஆறு மணிநேரம் முதல் எட்டு மணி நேரம் வரை உறங்குவதிலேயே பாதி ஆரோக்கியம் நமக்கு கிடைத்து விடும்.அடுத்ததாக காலையில் எழுந்தவுடன் அரை லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும்.ஆனால் நாம் யாரும் அதிகமாக தண்ணீர் குடித்து நம்முடைய வயிற்றை சுத்தமா வைத்து கொள்வதில்லை.நாம் எப்படி வகை வகையாக சாப்பிட்டு விட்டு அடுத்த முறை சாப்பிடுவதற்கு தட்டினை கழுவிகின்றோமோ அது போலவே தான் நம்முடைய வயிறும்.முதல் நாள் நாம் சாப்பிட்ட உணவுடன் கலந்தே அடுத்த நாளைக்கான உணவு ஜீரணிக்க படுகின்றது.காலையில் நமக்கு தண்ணீர் தாகம் இருக்காது.முதன் முதலாக குடிக்கும் போது ஒரு மாதிரி இருக்கும்.ஆனால் போக போக சரி ஆகிவிடும். தண்ணீர் குடிக்க பழகி கொண்டால் அதன் பின்னர் உங்களுக்கே சில உடல் ஆரோக்கிய மாற்றம் தெரிய வரும்.
அடுத்ததாக யோகா.சில அறிவாளிகள் யோகாவையும் உடற்பயிற்சியையும் சேர்ந்து செய்வர்.யோகா என்பது உடற் சக்தியை சேர்ப்பது.உடற் பயிற்சி என்பது சேர்த்து வைத்ததை வீணாக்குவது.இந்த இரண்டும் சேர்ந்து செய்தால் பளு தாங்காமல் ஸ்ப்ரிங் அறுந்த கதை தான்.அதனால் இதில் எதாவது ஒன்றை மட்டுமே செய்ய வேண்டும்.
காலையில் யோகா செய்தவுடன் மூலிகை சாறு குடிக்க பழக வேண்டும்.கத்தாழை (சதை பகுதியை மட்டும் எடுத்து கொள்ளலாம்.தோலில் மட்டுமே கசப்பு தன்மை இருக்கும்),வேப்பங் கொழுந்து(சிறிது சேர்த்தல் போதும்),துளசி (சற்று அதிகமாக சேர்த்து கொள்ள வேண்டும் ஏன் என்றால் வேப்பிலை கசப்பு தன்மையை குறைக்க உதவும்.அதை விட பல மருத்துவ குணங்களை கொண்டதும் கூட ),அருகம் புல்.(நம்முடைய உடம்பை ரத்தத்தை சுத்தமாக வைத்து கொள்ளும்).
அடுத்தாக யோகா செய்ய வேண்டிய நேரங்கள் என்று பார்த்தால் காலை சூரிய வெளிச்சம் நம் மீது பட தொடங்கி அது நமக்கு சுடுவதாக உணரும் வரை(அதற்காக சூரிய வெளிச்சம் எனக்கு சுடவில்லை என்று நண்பகல் வரை உட்கார்ந்து இருக்க கூடாது).மாலையில் அது போலவே சூரியன் சூடு குறைந்த பின் மாலை வெயில் முதல் மறையும் வரை இருக்கும் நேரத்தினை எடுத்து கொள்ளலாம்.சோரியாசிஸ் உள்ளவர்கள் சுடும் சூரிய வெளிச்சத்தை தவிர்ப்பது நல்லது.காலை மாலை வெயில் வெயிலில் நன்றாக செல்லலாம்.முடிந்த வரை தவிர்த்தால் சோரியாசிஸ் கூடுவதை தவிர்க்கலாம்
சோரியாசிஸ் - குணமாக ஒரு விடிவு காலம் :
முன்குறிப்பு :
சோரியாசிஸ் உள்ளவர்கள் உங்கள் வீட்டில் பெட்டி பெட்டியாக அடிக்கி வைத்து இருக்கும் மருந்துகளை முதலில் குப்பையில் போட்டு விட்டு வந்து இந்த மருந்தினை உபயோகிக்க வாருங்கள்.இந்த மருந்தினை பற்றி என்னுடைய முதல் பதிவில் இதுதான் மருந்து என்று கூறி இருக்கலாம்.ஆனால் அப்படி நான் கூறபோய் இதை பார்த்து நீங்கள் இது ஒரு விளம்பர தளம் என்று நினைத்து விட கூடாது அல்லவா!.அதனால் தான் சில அடிப்படை கருத்துகளை கூறிவிட்டு கூறலாம் என்று இருந்தேன்.இப்போது என்னை நம்பி பதிவிற்கு வந்து கேட்பதால் சொல்கிறேன்.இதை நீங்களே தயாரித்து கொள்ளலாம்.
சோரியாசிஸ் குணமாக:
சோரியாசிஸ் குணமாக சித்தாவிலும் ஹோமியோபதியிலும்(உட்பிரிவு மலர் மருந்து)மருந்து உண்டு.சித்தவில் பார்த்தால் அது உடல் சம்பந்தபட்டது.ஆனால் ஹோமியோபதியை எடுத்து கொண்டால் அது மன சம்பந்தபட்டது.அதனால் நாம் உடலுக்கு மருந்து கொடுக்கும் சித்தா எடுத்து கொள்வோம்.ஏன் என்றால் ஹோமியோபதியில் அந்த நோய்க்கு சம்பந்தபட்டவர் நேரில் வரவேண்டி வரும்.அதையும் மீறி நான் அதை பற்றிய பதிவாக இட்டால் அதனை மற்றவர்களால் புரிந்து கொள்ள முடியாது.சரி இனி சோரியாசிஸ் குணப்படுத்துவதற்கான மருந்து என்னவென்றால் "வெட்பாலை" -(Holarrhena Antidysenterica).இதனை வட்டார மொழிகளில் 'வெம்பாலை' என்று கூறுவர்.இந்த மருந்தினை பற்றி கூறும் முன் சில விசயங்களை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.நான் இந்த மருந்தினை தைரியமாக பரிந்துரைப்பதற்கு இரண்டு காரணங்கள் உண்டு.
என்னடைய தோழி ஒருத்திக்கு சோரியாசிஸ் வந்து அவளுக்கு தலையில் இருந்து ஆரம்பித்து தற்போது நான் யூகித்தபடி அவளுக்கு இடுப்பு வரை வந்து இருக்க வேண்டும்.ஆனால் அவளை
ஒரு இரண்டு மாதங்கள் கடந்து அவளை பார்த்தேன்.எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.ஏன் என்றால் அவளுக்கு சோரியாசிஸ் முற்றிலுமாக மறைந்து போய் தழும்பு கூட தெரியவில்லை.அவள் இந்த மருந்தை பற்றி கூறினாள்.அடுத்ததாக என்னுடைய சித்தா மருத்துவ நண்பர் நான் இந்த மருந்தை பற்றி அவரிடம் கூறிய போது அவருடைய மருந்துகளில் வெட்பாலையின் இலைகளை கொண்டு தான் மருந்து தயாரித்து வந்து கொண்டு இருக்கின்றார் என்பதை தெரிந்து கொண்டேன்.அவர் இந்த வெட்பாலை உட்பொருளாக கொண்டு சோரியாசிஸ்சிற்காக மருந்து தயாரித்து இதுவரை அவர்களிடம் சென்றவர்கள் மீண்டும் சோரியாசிஸ் வந்ததாக யாரும் இல்லை என்பதை கூறினார்.சரி இனி இந்த வெட்பாலையை எப்படி பயன்படுத்தவது என்பதை பற்றி பார்க்கலாம்.
வெட்பாலை -(Holarrhena Antidysenterica):
முதலில் தூய்மையான தேங்காய் எண்ணெய்யில் வெட்பாலையின் கொழுந்து ( நுனி பகுதி ) அதை ஒடித்து பார்த்தால் அதில் பால் வடியும்.அந்த பாலினை சேகரித்து தேங்காய் எண்ணையில் கலந்து வெயிலில் வைக்க வேண்டும்.இதில் கால் லிட்டர் தேங்காய் எண்ணெயில் இரண்டு ஸ்பூன் வெட்பாலையின் பாலை கலக்க வேண்டும்.அது சிறிது நேரம் கழித்து கத்திரிகாய் நிறத்தில்(purple color)அந்த எண்ணெய் மாறும் வரை வைக்க வேண்டும்.அப்படி நிறம் மாறாமல் இருந்தால் இன்னும் சிறிது நேரம் அதை வைத்து இருக்க வேண்டும்.கண்டிப்பாக மாறி விடும்.இதனை நன்றாக உடம்பில் பூசி செதில்களில் நனையும்படி தேய்த்து கொள்ளவும்.தினமும் இதனை தேய்த்து வந்தாலே போதுமானது.
எப்போதும் இந்த எண்ணெய் உங்கள் உடம்பில் சிறுது அளவு இருக்குமாறு பார்த்து கொள்ள வேண்டும்.தலைக்கும் இந்த எண்ணெய் தேய்த்து சீகக்காய் தேய்த்து குளித்து விட்டு மீண்டும் இதே எண்ணெய் தேய்த்து கொள்ள வேண்டும்.இது பொதுவாக சித்தா மூலிகை தோட்டத்தில் கிடைக்கும்.அப்படி கிடைக்காவிட்டால் எதாவது ஒரு சித்த மருத்துவரிடம் கேட்டால் அவர் கூறிவிடுவார்.மதுரையில் நான் இருப்பாதால் இங்கு வெட்பாலை செடி கிடைக்கும் இடம் தெரியும்.மதுரையில் இருந்து மேலூர் செல்லும் வழியில் உள்ள யானைமலையின் உச்சியில் இந்த செடி அடர்ந்து கிடக்கும்.அது போக இதே எண்ணையை எந்த ஒரு வெட்டு காயமோ அல்லது தோல் சம்பந்தபட்ட அனைத்திற்கும் இதே எண்ணையை உபயோகபடுத்தலாம்.
அடுத்ததாக உணவு முறை :
உணவு முறையை பொறுத்த வரை நீங்கள் கிழே உள்ளதை மட்டும் மனதில் வைத்து கொள்ளுங்கள்.இதனை மட்டும் தவிர்த்தல் போதும்.
*பால்
*மது
*செயற்கை நிறம் ஊட்டுபவை மற்றும் ப்ரிசெர்வேடிவ்கள்
*காளான் (இது பூஞ்சான் வகைகளை சேர்ந்தது.சோரியாசிஸ் அல்லாதவர்களும் இதனை உட்கொள்ள கூடாது என்பதே உண்மை.).
*உங்களுக்கு ஒவ்வாமை ஏற்படும் உணவு வகைகள்.
இதனை மட்டும் கடை பிடித்தால் போதுமானது.காளான் எதற்காக சேர்க்க கூடாது என்றால் அதில் விஷ காளான்கள் இருக்கும்.சுத்தமான காளான்களை சாப்பிடுவதில் தவறு இல்லை.இதை எப்படி கண்டு பிடிப்பது என்றால் சுடுநீரில் காளான்களை போட்டு அதில் ஒரு வெள்ளி காசினை போட்டால் அது நிறம் மாற கூடாது.அப்படி இல்லாமல் மாறினால் அது விஷ காளான்கள்.சோரியாசிஸ் உள்ளவர்கள் சுத்தமான காளான்களாக இருந்தாலும் சேர்க்க கூடாது.
நன்றி,நன்றி,நன்றி:-psoriyasis.blogspot.com/